| ADDED : ஜன 30, 2024 11:48 PM
உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பட்டா வழங்கும் விழா காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.உத்திரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்நிகழ்ச்சியில், தமிழக சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று பட்டாக்களை வழங்கினார்.ஏற்கனவே வழங்கிய பட்டாக்களை கணினி வழி பட்டாவாக மாற்றம் செய்த வகையில் 1,793 பேருக்கும், காலி மனையில் நிலம் எடுப்பு செய்த மனை பட்டா 68 பேருக்கும், புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வீட்டு மனை பெற தகுதியான பயனாளிகள் 388 பேர் என மொத்தம் 2,249 பேருக்கு 18.91 கோடி ரூபாய் மதிப்பில் மனை பட்டா வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயகுமார், உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா உட்பட பலர் பங்கேற்றனர்.