வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எங்கள் ஊரில் எப்போதுமே குலோரின் கலக்கப்படவில்லை
உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு பாதிப்பு தொடரும் நிலையில், ஊராட்சிகளில், குளோரின் கலக்காமல் குடிநீர் வினியோகம் செய்யப்படுவது, சுகாதாரத் துறையினர் ஆய்வில் தெரிய வந்தது அதிர்ச்சியளிக்கிறது. இந்த விவகாரத்தில், மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிகளில் ஆங்காங்கே, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கிறது. ஆறு மாதங்களில் மட்டும், 125 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பாதிப்பு ஏன் ஏற்படுகிறது என தெரியாமல், மாவட்ட நிர்வாகமும் விழிபிதுங்கி நின்றது. என்ன நடக்கிறது?
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில், 1,950 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. ஊராட்சி மற்றும் குக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, தலா, 30,000 லிட்டர் என, 1.56 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும், 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து, குளோரின் கலந்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சிகளில், சுத்தமான குடிநீர் வினியோகம் செய்வதை, சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் நகர் நல சுகாதார ஆய்வாளர்கள் கண்காணித்து வந்தனர். ஊரக உள்ளாட்சிகளில் இருக்கும் பெரும்பாலான சுகாதார ஆய்வாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை ஆய்வு செய்வதில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளும் தண்ணீரை குளோரின் கலக்காமல் இஷ்டம்போல் வினியோகித்து வருகின்றனர். இதன் காரணமாக, ஆறு மாதங்களில் மாவட்டம் முழுதும், 125 பேர் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டனர். மருத்துவ சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சோதனை
இந்நிலையில், காஞ்சி புரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்தில், நான்கு சுகாதார ஆய்வாளர்களை கொண்ட குழுவினர் சமீபத்தில், 73 ஊராட்சிகளின் குடிநீர் மாதிரி சேகரித்து சோதனை செய்தனர். இதில், ஒரு ஊராட்சியில்கூட குளோரின் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்பது அம்பலமானது. இதுதான், பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கு காரணம் என்பது தெரிய வருகிறது. இதேபோல், வாலாஜாபாத், காஞ்சிபுரம், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஒன்றியங்களிலும் உள்ள ஊராட்சிகளில், குளோரின் கலக்காமல் குடிநீர் வினியோகம் நடப்பதாக அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர். இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத ஊராட்சி தலைவர் ஒருவர் கூறுகையில், 'துாய குடிநீரை வழங்குவதற்கு தேவையான குளோரின் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்து விடுகிறோம். சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தான் முறையாக பராமாரிக்க வேண்டும்' என்றார். இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட பம்ப் ஆப்ரேட்டர் சங்க நிர்வாகி கூறியதாவது: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை, 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு அரசு குறைந்த நிதியே தருகிறது. அந்த தொகையையும், ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் தராமல் காலம் தாழ்த்துகின்றனர். அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது மட்டும், கூடுதல் பணம் கொடுத்து, ஊராட்சி நிர்வாகம் சுத்தம் செய்கிறது. துாய குடிநீர் வழங்க ஊராட்சி நிர்வாகம் கூடுதல் நிதி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நடவடிக்கை எடுக்கப்படும்
ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது: பெரும்பாலான ஊராட்சிகளில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்து வருகிறோம். ஒரு சில கிராமங்களில் அந்த வசதி இல்லை. இதுபோன்ற கிராமங்களில் குளோரின் கலந்த நீரை வினியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். அறிவுரையை பின்பற்றாத ஊராட்சிகள் மீது நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஊராட்சிகளில், குளோரின் கலந்த தண்ணீரை வினியோகம் செய்தால், அச்சமின்றி குடிக்கலாம். குளோரின் கலக்காத பட்சத்தில், தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின், குடிநீராக பயன் படுத்தலாம். ஒரு நாள் கொதிக்க வைத்த தண்ணீரை, ஒரே நாளில் தீர்ந்துவிடும்படி பயன்படுத்த வேண்டும்; மறுநாள் பயன்படுத்தக்கூடாது. - செந்தில், துணை இயக்குநர், சுகாதார நலப்பணிகள், காஞ்சிபுரம்.
எங்கள் ஊரில் எப்போதுமே குலோரின் கலக்கப்படவில்லை