உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாணவர்கள் எழுதிய புத்தகங்கள் காஞ்சியில் பிழை திருத்தும் முகாம்

மாணவர்கள் எழுதிய புத்தகங்கள் காஞ்சியில் பிழை திருத்தும் முகாம்

காஞ்சிபுரம்: தமிழகம் முழுதும், 'எழுதுக' அமைப்பு சார்பில், 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் எழுதிய புத்தகங்களில் உள்ள பிழை திருத்தும் முகாம் பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் 'எழுதுக' என்ற அமைப்பினர், தமிழகம் முழுதும் உள்ள அரசுபள்ளி மாணவ - மாணவியருக்கு புத்தகம் எழுதுவது எப்படி என்று பயிற்சி வழங்குவதுடன் அவற்றை வெளியிட்டும் வருகின்றனர். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான புத்தகம் எழுதும் பயிலரங்கம், தமிழக முன்னாள் தலைமை செயலர் வெ.இறையன்பு தலைமையில் கடந்த மாதம் 6ம் தேதி நடந்தது. இதில், தமிழகம் முழுதும் 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் புத்தகங்களை எழுதி இருந்தனர். மாணவ - மாணவியர் எழுதிய புத்தகங்களின் பிழை திருத்தும் முகாம் பெரியகாஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. இதில்,பல்வேறு பள்ளி, கல்லுாரியைச் சேர்ந்த தமிழ் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ - மாணவியர், தமிழ் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் 75 பேர், புத்தகங்களில் பிழைகள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக பிழைகள் திருத்துவது எப்படி என்ற கலந்துரையாடல், எழுதுக' அமைப்பின் மூத்த ஒருங்கிணைப்பாளர் சுகுமார் தலைமையில் நடந்தது. தமிழ் ஆசிரியர்கள் அன்புச்செல்வி, பூங்குழலி, செண்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் நிர்வாகி பாலச்சந்தர் வரவேற்றார். ஒரே நாளில் 75 புத்தகங்கள் திருத்தும் பணி நடைபெற்று முடிந்துள்ளதாகவும் மற்ற புத்தகங்களும் வெவ்வேறு நாட்களில் பிழை திருத்தும் பணி நடைபெற உள்ளது.பிழை திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதும் புத்தகங்கள் அனைத்தும் வெளியிடப்படும் என 'எழுதுக' அமைப்பின் ஒருங்கிணை ப்பாளர் கிள்ளி வளவன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை