பழையசீவரம் மலை நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல எதிர்பார்ப்பு
வாலாஜாபாத், காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் அடுத்து பழையசீவரம் உள்ளது. பழைய சீவரம் பாலாற்றின் மறுகரையில் திருமுக்கூடல், புல்லம்பாக்கம், சிறுதாமூர்,சித்தாலப்பாக்கம், அருங்குன்றம், பழவேரிஉள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்தோர், பழையசீவரம் மலை நிறுத்தத்திற்கு வந்து, அங்கிருந்து பேருந்து வாயிலாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். ஒரகடம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு பணியாற்ற செல்லும் ஏராளமான தொழிலாளர்களும், இப்பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து செல்கின்றனர். செங்கல்பட்டு- - காஞ்சிபுரம் இடையே இயக்கப்படும், தடம் எண்: 212பி என்ற அரசு பேருந்து மட்டுமே இந்த நிறுத்தத்தில் நின்று செல்கிறது.தடம் எண்: 212எச் மற்றும் கல்பாக்கத்தில் இருந்து வரும்,தடம் எண்: 157 உள்ளிட்ட பேருந்துகள், இச்சாலை வழியாக வழிநில்லா பேருந்துகளாக இயக்கப்படுகின்றன.மாலை நேரத்தில் செங்கல்பட்டில் இருந்து, காஞ்சிபுரம் வரை இயங்கும் தனியார் பேருந்துகளும், எல்.எஸ்.எஸ்., எனக் கூறி நிறுத்தம் செய்வதில்லை.இதனால், இப்பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணியர் கடும் அவதிப்படுகின்றனர். அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, பழையசீவரம் மலை பேருந்து நிறுத்தத்தில் தனியார் மற்றும் அனைத்து வகை அரசு பேருந்துகளும் நிறுத்தம் செய்து இயக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர்கோரிக்கை விடுத்துஉள்ளனர்.