மேலும் செய்திகள்
ஏரி மதகு சேதமானதால் விளை நிலங்களில் புகும் நீர்
28-Oct-2025
உத்திரமேரூர்: -சிறுபினாயூர் ஏரியில் சேதமடைந்துள்ள மதகுகளை சீரமைக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் தாலுகா, சிறுபினாயூர் கிராமத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின்கீழ், 300 ஏக்கர் பரப்பளவிலான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் நிரம்பும் தண்ணீரை கொண்டு, 450 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இங்கு, 5 மதகுகள், 2 கலங்கல்கள் உள்ளன. இந்நிலையில், ஏரியில் உள்ள 2 மற்றும் 3-வது மதகுகள், மூன்று ஆண்டுக்கு முன் பழுதடைந்தது. தற்போது வரை மதகுகள் சீரமைக்கப்படாமல் முட்செடிகள் வளர்ந்து இருப்பதால், மழை நேரத்தில் தண்ணீர் பழுதடைந்த மதகுகளின் வழியே, வீணாக வெளியேறி வருகிறது. இதனால், இரண்டு போகம் விவசாயம் செய்த இப்பகுதியில், ஒரு போகம் மட்டுமே விவசாயம் செய்ய முடிகிறது. மேலும், மழைக்காலங்களில் ஏரி முழு கொள்ளளவை எட்டினால், சேதமடைந்த மதகுகளில் உடைப்பு ஏற்பட்டு, விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் வீணாக வாய்ப்பு உள்ளது. எனவே, சிறுபினாயூரில் சேதமடைந்துள்ள மதகுகளை சீரமைக்க, பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28-Oct-2025