சாலையில் நெல்லை உலர்த்தும் விவசாயிகள் கூடுதல் நெற்களம் அமைக்க வலியுறுத்தல்
உத்திரமேரூர்:இளநகரில், நெல்லை உலர்த்த போதிய இடம் இல்லாததால், சாலையில் கொட்டி விவசாயிகள் உலர்த்தி வருகின்றனர். கூடுதலாக நெற்களம் அமைக்க, ஊரக வளர்ச்சி துறையினரை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியம், இளநகர் கிராமத்தில், 3,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிப்போர், விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் தற்போது சொர்ணவாரி பருவ நெல் அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. அவ்வாறு அறுவடை செய்யும் நெல்லை, அப்பகுதி விவசாயிகள் கால்நடை மருந்தகம் அருகே உள்ள, நெற்களத்தில் கொட்டி உலர்த்தி வருகின்றனர். இளநகரில் ஒரே ஒரு நெற்களம் இருப்பதால் அறுவடை செய்யப்படும் நெல்லை, உலர்த்த போதிய இடம் இல்லாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, களியாம்பூண்டி செல்லும் சாலையில், கொட்டி உலர்த்தி வருகின்றனர். வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், விவசாயிகள் நெல்லை கொட்டி உலர்த்தி வருவதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, இடையூறு ஏற்பட்டு விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே, இளநகரில் கூடுதலாக நெற்களம் அமைக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.