நெய்க்குப்பம் ஏரியை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
வாலாஜாபாத்:நெய்க்குப்பம் ஏரி நீர் பிடிப்பு பகுதியை துார்வாரி கோரை புற்களை அகற்றி, சீரமைக்க அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.வாலாஜாபாத் வட்டாரம், அவளூர் ஊராட்சிக்கு உட்பட்டது நெய்க்குப்பம் கிராமம். இக்கிராமத்தில், ஒன்றிய கட்டுப்பாட்டிலான 90 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரி பருவ மழைக்காலத்தில் முழுமையாக நிரம்பினால், அத்தண்ணீரைக் கொண்டு, 160 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.நெய்க்குப்பம் ஏரி, பல ஆண்டுகளாக துார்வாராமல் ஏரி நீர் பிடிப்பு பகுதிகள் துார்ந்து, கோரை புற்கள் வளர்ந்து காணப்படுகின்றன. இதனால், மழைக்காலத்தில் ஏரியில் போதுமான அளவு தண்ணீர் சேகரமாகாத நிலை உள்ளது.ஏரியில் குறைந்த அளவு தண்ணீர் சேகரமாவதால் சாகுபடி காலத்தில் இறுதிகட்ட பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் சிரமபடுகின்றனர்.எனவே, நெய்க்குப்பம் ஏரியை துார்வாரி மழைக்காலத்தில் ஏரி முழு கொள்ளளவை எட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.