சென்னை:தீயணைப்பு துறையினருக்கான மண்டல விளையாட்டு போட்டிகளில் தென் சென்னை, வடசென்னை வீரர்கள் முதலிடங்களைப் பிடித்தனர்.தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள், கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள நேரு பார்க் மைதானத்தில், கடந்த இரண்டு நாட்கள் நடந்தன.இதில், தீயணைப்பு துறை சார்ந்த ஏணி போட்டி, கயிறு ஏறுதல், மீட்புப் பணி உள்ளிட்ட பலவித போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோல், தனியாக 100 மீ., துவங்கி, 1,500 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகளும் நடத்தப்பட்டன.போட்டியில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை மற்றும் புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட வீரர்கள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர்.அனைத்து போட்டிகளின் முடிவில், துறை ரீதியான போட்டிகளில், தென்சென்னை மாவட்டம் முதலிடத்தை பிடித்தது. தடகளப் போட்டிகளில், வடசென்னை மாவட்டம் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றது. வடமண்டல இணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கி கவுரவித்தார். நிகழ்வில், மாவட்ட அலுவலர் சரவணன் மற்றும் லோகநாதன், தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.