உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கடல் ஆமைகள் உயிரிழப்பை தடுக்க ஜி.பி.எஸ்., ட்ரோன் கண்காணிப்பு தீர்ப்பாயத்தில் வனத்துறை அறிக்கை

கடல் ஆமைகள் உயிரிழப்பை தடுக்க ஜி.பி.எஸ்., ட்ரோன் கண்காணிப்பு தீர்ப்பாயத்தில் வனத்துறை அறிக்கை

சென்னை, கடற்கரைகளில் கடல் ஆமைகள் இறந்து ஒதுங்குவது தொடர்பாக, சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், தாமாக முன் வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், 'ஆமைகள் இறப்பை தடுக்கும் வகையில், அதிவேக விசைப்படகுகள் இயக்க தடை விதிக்க வேண்டும். தலைமை செயலர் இதை கண்காணிக்க வேண்டும்' என, தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா, தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த அறிக்கை:கடந்த ஜன., 17 முதல் பிப்., 4 வரை, 19 நாட்களில், சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடற்கரையில், 792 கடல் ஆமைகள் உயிரிழந்தது கண்டறியப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 671 ஆமைகள் இறந்துள்ளன. கடலுாரில் 52, நாகையில் 35, விழுப்புரத்தில் 27, ராமநாதபுரத்தில் ஐந்து, கன்னியாகுமரியில் இரண்டு ஆமைகளின் உடல்கள் மீட்கப்பட்டன. ஜன.,24ல், சென்னையில் மட்டும், 106 கடல் ஆமைகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த கடல் ஆமைகளின் உடல் தமிழக கால்நடை மருத்துவ பல்கலை டாக்டர்களால், பரிசோதனை செய்யப்பட்டது. ஆமைகளை கண்காணிக்கவும், இனப்பெருக்கத்திற்கான சூழலை உருவாக்கவும், தினமும் இரவு ரோந்துப்பணி நடக்கிறது. மனிதர்கள், பிற உயிரினங்களிடம் இருந்து ஆமை முட்டைகளை பாதுகாக்கவும், அவற்றை அடைகாத்து பாதுகாப்பாக குஞ்சு பொரிப்பதற்கான சூழலை உருவாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.ஆமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான மீன்பிடி கருவிகளையும், மீன்பிடி முறைகளை பின்பற்றுவது குறித்து, தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.பிப்.,1ல், வனம், மீன்வளத் துறைகள், கடலோர காவல்படை, சாகர் மித்ரா ஊழியர்களுடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு ரோந்து நடவடிக்கையில், சட்ட விரோத இலுவை வலையில் சிக்கிய, 16 ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் மீட்கப்பட்டு கடலில் விடப்பட்டன. விதிகளை மீறிய, 170க்கும் அதிகமான அதிவேக விசை படகுகள் கண்டறியப்பட்டு உள்ளன.கடந்த 6ம் தேதி, தலைமை வனப் பாதுகாவலர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. ஜி.பி.எஸ்., டிரோன் வாயிலாக, சட்ட விரோத மீன்பிடித்தலை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சியால், ஆமைகள் இறப்பு கணிசமாக குறைந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி