பாலாற்றை பாழாக்கும் குப்பை கலந்த கழிவுநீர்
வாலாஜாபாத்,:வாலாஜாபாத் பேரூராட்சி, வெள்ளேரியம்மன் கோவில் கிராமத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரி மழைக்காலத்தில் நிரம்பி அதன் வாயிலாக வெளியேறும் உபரி நீர், வாலாஜாபாத் பாலாற்றை சென்றடயும் வகையில், நீர்ப்போக்கு கால்வாய் அமைந்துள்ளது.இக்கால்வாய் வெள்ளேரியம்மன் கோவில், அண்ணா நகர் மற்றும் பேருந்து நிலைய பின்புறம் வழியாக சென்றடைந்து, வாலாஜாபாத் ரவுண்டனா சாலை அருகிலான தரைபாலத்தை கடந்து வாலாஜாபாத் பாலாற்றில் கலக்கிறது.கடந்த ஆண்டுகளில் நீர்ப்போக்கு மற்றும் மழைநீர் வடிய பயன்பாடாக இருந்த இக்கால்வாய், நாளடைவில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயாக மாறியது.இந்நிலையில், இந்த கால்வாயில், சமீப காலமாக கழிவுநீர் மட்டுமின்றி, அப்பகுதி கடைகளில் இருந்து வெளியேறும் குப்பை கழிவை குவிக்கும் இடமாக மாறி உள்ளது.இதனால், குப்பை கலந்த கழிவுநீர் பாலாற்றை சென்றடையும் நிலை இருந்து வருகிறது.இதுகுறித்து, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:வாலாஜாபாத் பாலாற்று படுகை வாலாஜாபாத் மற்றும் சுற்றிலும் உள்ள கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இங்குள்ள ஆற்று படுகையில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் வாயிலாக பாலாற்றங்கரையொட்டி உள்ள பகுதிகளுக்கு நிலத்தடியில் புதைத்த குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.ஏற்கனவே காஞ்சிபுரம் அடுத்த, அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுநீர், தோல் மற்றும் ரசாயன கழிவு, உணவக கழிவு மற்றும் வீட்டு கழிவுநீர் போன்றவை வேகவதி ஆற்று வழியாக பாலாற்றில் கலக்கும் நிலை உள்ளது.இந்நிலையில், வெள்ளேரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதி வழியான கால்வாயில் கழிவுநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு பாலாற்றில் கலக்க செய்வது, ஆற்றின் நீர்வளம் மற்றும் மண் வளத்தை மேலும் மாசடைய செய்வதாக உள்ளது.எனவே, பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.