உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரத்தில் ஆக்கிரமிப்புகளால் அரசு நீர்நிலைகள்...கபளீகரம்! :600 ஏக்கருக்கு மேலான இடங்களை மீட்பது எப்போது?

காஞ்சிபுரத்தில் ஆக்கிரமிப்புகளால் அரசு நீர்நிலைகள்...கபளீகரம்! :600 ஏக்கருக்கு மேலான இடங்களை மீட்பது எப்போது?

காஞ்சிபுரம்:தொழில் வளர்ச்சிக்கும், ஆன்மிகத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏரி, குளம், குட்டை, ஆறு, கால்வாய் போன்ற நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள், அதிகாரிகள் அலட்சியத்தால், தற்போது வரை நுாற்றுக்கணக்கான இடங்களில் தொடர்கிறது. மாவட்டத்தில், 600 ஏக்கருக்கும் மேலாக, நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ள நிலையில், பல இடங்களில் மேலும் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான ஏரிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருப்பதால், இம்மாவட்டத்தை ஏரிகள் மாவட்டம் என்பர். காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும் ஐந்து தாலுகாக்களிலும், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகளும், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் 380 ஏரிகள் என, 761 ஏரிகள் உள்ளன.அனைத்தும் பாசனத்துக்கு பயன்படும் வகையில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் உள்ளன. இதுமட்டுமல்லாமல், ஆன்மிகத்திலும் காஞ்சிபுரம் மாவட்டம் முக்கியத்துவம் வகித்து வருகிறது.முக்கியத்துவம் வாய்ந்த ஏரி, குளம், கால்வாய் போன்றவை, ஆக்கிரமிப்புகளால் சீரழிந்து போயுள்ளன. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் கால்வாய்களில், 30 ஆண்டுகளில் மெல்ல மெல்ல ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.தற்போது, ஒவ்வொரு ஏரியிலும் நுாற்றுக்கணக்கான ஆக்கிரமிப்பு வீடுகள், கட்டடங்கள் முளைத்துள்ளன. விவசாயிகள் பலரும் ஏரி கால்வாய்களை ஆக்கிரமித்து, விவசாய பணியில் ஈடுபட்டுள்ளனர். கால்வாய் இருந்த இடமே தெரியாத அளவுக்கு, அப்பகுதியே உருமாறி காணப்படுகிறது.வருவாய் துறையினர் தகவல்படி, காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், 660 ஏக்கர் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் இன்னும் அகற்றப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், மழைக்காலத்தில் தண்ணீர் புகுந்து, அங்குள்ளவர்களின் உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்படுகிறது.நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள முடியாது என, நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளில் தெரிவித்துள்ளது.இருப்பினும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருவாய் துறை, நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறையினரின் அலட்சியம் காரணமாக, ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாமல் விடுவதும், அவற்றை அகற்றாமல் வேடிக்கை பார்ப்பதால், பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு இடங்கள் கபளீகரம் செய்யப்படுகிறது.இன்றைய சூழலில், சென்னைக்கு அருகேயுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில், தொழிற்சாலைகளும், சிறிய தொழில் நிறுவனங்களும், கடை, உணவகம், சேவை நிறுவனங்களை என, பல்வேறு வியாபாரங்களை ஏராளமானோர் துவக்குகின்றனர்.தொழில் முதலீட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு நீர்நிலை புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து, பலரும் கடைகள் கட்டி வாடகைக்கு விடுவது தொடர்கிறது.பல லட்ச ரூபாய் லஞ்சமாக பெற்றுக் கொண்டு, வேடிக்கை பார்க்கும் அதிகாரிகளால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்வதோடு, அதன் வாயிலாக தனிநபர்கள், அதிகாரம் படைத்தோரும், வசதி படைத்தோரும் ஆதாயம் அடைகின்றனர்.கடந்த 2022ல், 300 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு இடங்கள் பல இடங்களில் அதிரடியாக மீட்கப்பட்டன. அதன்பின், அரசு இடங்களை மீட்கும் நடவடிக்கைகளில், மாவட்டத்தின் உயரதிகாரிகள் ஈடுபட சரிவர முயற்சிக்காததால், ஆக்கிரமிப்பாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில், நீர்நிலை ஆக்கிரமிப்பு என்றாலோ அல்லது அரசு இட ஆக்கிரமிப்பு என மனு அளித்தாலோ, சர்வே செய்ய கூட அதிகாரிகள் வருவதில்லை என, வாரந்தோறும் பலர் புலம்புகின்றனர்.ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரும் மனுக்களை விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும், கலெக்டர் அலுவலகத்தில் தனி பிரிவு துவக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்களும், இயற்கை ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.காஞ்சி மாவட்டத்தில், அரசு அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படாத ஆக்கிரமிப்புகள்:* குன்றத்துார் தாலுகாவில் உள்ள அணைக்கட்டு தாங்கல் ஏரியின், 133 ஏக்கரும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, முழுதும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், 11.12 கோடியில் அடையாறு குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்கும் பணியில், வெள்ள கரை அமைத்தல் மற்றும் ஏரியை ஆழப்படுத்தும் பணி நின்று போயுள்ளது.* காஞ்சிபுரத்தில் வேகவதி ஆற்றின் இரு கரையிலும், 1,400 ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன. இவர்களுக்காக, கீழ்கதிர்பூர் கிராமத்தில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்ட போதிலும், இந்த ஆக்கிரமிப்பாளர்களை அகற்றாமல், மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்க்கிறது.* மணிமங்கலம் ஏரியின் ஒரு பகுதியில் நுாற்றுக்கணக்கான ஆக்கிரமிப்புகள் வீடுகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன.* பழையசீவரம் பகுதியில் அரும்புலியூர் கால்வாய் பல கி.மீ., துாரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மிக அகலமான இக்கால்வாய் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி, கால்வாய் இருக்கும் தடமே தெரியாத அளவுக்கு மாறியுள்ளது.* ஈஞ்சம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கால்வாய் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இக்கால்வாய் வழியாக ஏரிக்கு தண்ணீர் சென்று பல ஆண்டுகளாகின.* மாவட்டத்தின் பல இடங்களில் ஏரியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து, பல நுாறு ஏக்கர் நிலங்கள் விவசாயம் செய்யப்படுகிறது. ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்வது அதிகரித்துள்ளது.* காஞ்சிபுரத்தில் பொன்னேரிக்கரை, அல்லாபாத், செவிலிமேடு, ஓரிக்கை உள்ளிட்ட ஏரிகளின் பல இடங்கள் ஆக்கிரமிப்புளால் நிறைந்துள்ளன.* சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலும், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையிலும் ஏராளமான நீர்நிலை புறம்போக்கு இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, கடைகள் கட்டி வாடகை விடப்பட்டுள்ளன.* ஒரகடம் சந்திப்பில் உள்ள ஏரியின் கரை பகுதி முழுதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், படப்பை சுற்றியுள்ள பல ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வணிக ரீதியில் அந்த இடங்கள் இயங்கி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sivakumar
பிப் 02, 2025 16:25

Wait for another one or two rainy seasons to pass through Kanchipuram! Lakes and interconnected water channels were designed years ago in King ruled times. Politics has undone many of them. Vidiyal Aatchi knows people are looking for only instant gratification and no long-term solutions.


சமீபத்திய செய்தி