| ADDED : பிப் 15, 2024 09:40 PM
சென்னை:கிழக்கு தாம்பரம், கணபதி புரம், ஸ்மித்லைன் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 60. காய்கறி வியாபாரி; தாம்பரம் மார்க்கெட் பகுதி காய்கறி வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர்.சில நாட்களுக்கு முன், வீட்டில் இருந்து வெளியில் வந்தபோது தவறி விழுந்தார். தலையில் காயமடைந்த அவரை, மேற்கு தாம்பரத்தில் உள்ள இந்து மிஷன் மருத்துவமனையில், குடும்பத்தினர் சேர்த்தனர். ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறினர்.இதையடுத்து, அவருடைய உறுப்புகளை தானம் செய்ய, குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். அதன்படி, இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல், கண் கருவிழி ஆகிய உறுப்புகள், தானமாக அளிக்கப்பட்டன.இந்த நிலையில், அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ராமச்சந்திரன் உடலுக்கு, அரசு சார்பில் நேற்று, தாம்பரம் கோட்டாட்சியர் பரிமளா தேவி, அரசு மரியாதை செலுத்தினார்.