| ADDED : ஜன 11, 2024 09:55 PM
காஞ்சிபுரம்:ராம பக்தரான அனுமன் பிறந்த மார்கழி மாதம், அமாவாசையான நேற்று, காஞ்சிபுரத்தில் பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கிழக்கு மாட வீதியில் உள்ள 18 அடி உயர பக்த ஆஞ்சநேய சுவாமிக்கு, நேற்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.காஞ்சிபுரம் சர்வதீர்த்த கிழக்கு கரையில் அனுமந்தீஸ்வரர், யோகலிங்கேஸ்வர் கோவிலில் உள்ள வீர ஆஞ்சநேய சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.முத்தியால்பேட்டையில் உள்ள பிரசன்ன ஆஞ்சநேய சுவாமிக்கு அனுமன் ஜெயந்தியையொட்டி, சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சின்ன காஞ்சிபுரம், திருவள்ளுவர் தெருவில் உள்ள ஆஞ்சநேயருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பெருமாளின் 108 திவ்ய தேசத்தில் ஒன்றான காஞ்சிபுரம் அமிர்தவல்லி தாயார் சமேத திருவேளுக்கை அழகிய சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து வடை மாலை, வெற்றிலை மாலை, பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டது.● குன்றத்துார் அருகே சிக்கராயபுரத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், 32 அடி உயரத்தில் ஐந்து முகங்களுடன், 10 கரங்களுடன் மூலவராக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். நேற்று திருமஞ்சனம், தீபாரதனை, புஷ்பாஞ்சலி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன.அதேபோல், குன்றத்துார் அடுத்த கெருகம்பாக்கத்தில் நடிகர் அர்ஜுனுக்கு சொந்தமான தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள, 28 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் உள்ள ஆஞ்சநேயருக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தன.