மேலும் செய்திகள்
இரண்டாக பிரியும் கும்மிடிப்பூண்டி ஒன்றியம்
11-Dec-2025
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் ஒன்றியத்தில் இருந்து, சாலவாக்கம் தனி ஒன்றியமாக பிரித்து, தமிழக அரசு புதிய அரசாணை பிறப்பித்திருப்பது, பல்வேறு ஊராட்சி மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும், சட்டசபை தேர்தலுக்கு பின்தான் அமலுக்கு வரும் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர். தமிழகத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றியங்களில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் மிகப் பெரியது. இந்த ஒன்றியத்தில், 73 கிராம ஊராட்சிகளும், 368 குக்கிராமங்களும் உள்ளன. ஒன்றியத்தின் மேற்கு பகுதியில் உள்ள சாலவாக்கம் பகுதியைச் சுற்றி, 25க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் பினாயூர், பழவேரி, திருமுக்கூடல் போன்ற ஊராட்சிகள் வாலாஜாபாத் அருகிலும், பாலேஸ்வரம், ஆனம்பாக்கம் போன்ற ஊராட்சிகள் செங்கல்பட்டு அருகிலும் அமைந்துள்ளன. இந்த ஊராட்சிகளில் வாழும் கிராம மக்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால், இரண்டு பேருந்துகள் பிடித்து, 25 கி.மீ., கடந்து, உத்திரமேரூர் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. மேலும், ஒன்றியத்தில் உள்ள கடைக்கோடி கிராமங்களில், ஒன்றிய மேற்பார்வையாளர்கள் ஆய்வு செய்வதில் தொய்வு ஏற்பட்டு, நலத்திட்டப் பணிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. நடவடிக்கை எனவே, உத்திரமேரூர் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து, உத்திரமேரூரை தலைமையிடமாகக் கொண்டு, 38 ஊராட்சிகளும், சாலவாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு, 35 ஊராட்சிகளும் கொண்ட புதிய ஒன்றியத்தை உருவாக்க வேண்டிய நிலை எழுந்தது. இதனால், உத்திரமேரூர் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து சாலவாக்கம் தனி ஒன்றியத்தை துவக்குவது தொடர்பாக, 2013 செப்., 12ல், காஞ்சிபுரம் அண்ணா அரங்கில், அப்போதைய கலெக்டர் சித்திரசேனன் தலைமையில், கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. அதில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், பேரூராட்சித் தலைவர், ஊராட்சி தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், குடியிருப்பு சங்க பிரதிநிதிகள், கிராமத்தினர் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில், உத்திரமேரூர் ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க, மக்கள் பிரதிநிதிகளால் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து, அதே மாதம் 26ம் தேதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடந்த இரண்டாவது கருத்துக்கேட்பு கூட்டத்திலும், ஒன்றியத்தை இரண்டாக பிரிப்பது என, முடிவு செய்யப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியின்போது, மாவட்டங்களை பிரிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 2021ம் ஆண்டு, தமிழகத்தில் தி.மு.க., அரசு அமைந்த பின், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த பெரியகருப்பன், 2021 ஜூலையில் காஞ்சிபுரம் வந்திருந்தார். அப்போது, உத்திரமேரூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் உத்திரமேரூர் ஒன்றியத்தை பிரிக்க கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக, நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளிக்கப்பட்டது. அரசாணை இருப்பினும், ஊரக வளர்ச்சி துறையினர், தங்களின் வேலைகளில் முழு கவனம் செலுத்தி, உத்திரமேரூர், சாலவாக்கம் ஆகிய இரு ஊராட்சி ஒன்றியங்கள் பிரிக்கும் விதமாக, ஊராட்சிகளை தேர்வு செய்து, வரைபடம் வரைந்து அரசிற்கு கருத்து அனுப்பி இருந்தனர். அதன்படி டிச., 8ல், தமிழகம் முழுதும், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் ஒன்றியங்கள் பிரிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து, சாலவாக்கத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ஒன்றியம் துவக்கப்பட உள்ளது. சாலவாக்கத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி இருப்பதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி கூறியதாவது: உத்திரமேரூர் ஒன்றியத்தில் இருந்து, சாலவாக்கம் தலைமையிடமாக கொண்டு புதிய ஒன்றியத்தை துவக்க, தமிழக அரசு புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. வரும் சட்டசபை தேர்தலுக்கு பிறகே, நிர்வாக ரீதியாக பிரித்து, அதில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஒன்றிய வார்டு, மாவட்ட வார்டு ஆகியவை பிரிக்கப்படும். அரசு ஒப்புதலுக்கு பிறகே, புதிய ஒன்றியமாக உதயமாகும். அதற்கேற்ப, ஊரக வளர்ச்சி துறையில் புதிய அலுவலகத்திற்கு பணியிடங்கள் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். சாலவாக்கம் புதிய ஒன்றியத்தில் வரும் ஊராட்சிகள் ஆனம்பாக்கம், அன்னாத்துார், அரும்புலியூர், சின்னாலம்பாடி, எடமிச்சி, இடையாம்புதுார், களியப்பேட்டை, காட்டாங்குளம், காவிதண்டலம், கிளக்காடி, குண்ணவாக்கம், குருமஞ்சேரி, மதுார், மலையாங்குளம், நெய்யாடிவாக்கம், ஒரக்காட்டுப்பேட்டை, ஒழையூர், பாலேஸ்வரம், பழவேரி, பினாயூர், பொற்பந்தல், புலிப்பாக்கம், புல்லம்பாக்கம், ரெட்டமங்கலம், சாலவாக்கம், சாத்தனஞ்சேரி, சிறுதாமூர், சிறுமையிலுார், சிறுபினாயூர், சித்தனக்காவூர், திருமுக்கூடல், திருவாணைக்கோவில், தோட்டநாவல், வாடாதாவூர், வயலக்காவூர். உத்திரமேரூர் ஒன்றியத்தில் இருக்கும் ஊராட்சிகள் ஆதவப்பாக்கம், அகரம்துாளி, அழிசூர், அம்மையப்பநல்லுார், அரசாணிமங்கலம், அத்தியூர் மேல்துாளி, இளநகர், அனுமந்தண்டலம், கடல்மங்கலம், களியாம்பூண்டி, கம்மாளம்பூண்டி, காரணை, காரியமங்கலம், கருவேப்பம்பூண்டி, கட்டியம்பந்தல், காவாம்பயிர், காவனுார் புதுச்சேரி, மானாம்பதி, மானாம்பதி கண்டிகை, மருதம், மருத்துவம்பாடி, மேல்பாக்கம், மேனலுார், நாஞ்சிபுரம், ஒட்டந்தாங்கல், ஒழுகரை, பென்னலுார், பெருநகர், பெருங்கோழி, புலிவாய், புலியூர், ராவத்தநல்லுார், சிலாம்பாக்கம், தளவாரம்பூண்டி, தண்டரை, திணையம்பூண்டி, விசூர், திருப்புலிவனம்.
11-Dec-2025