மாமல்லபுரம் : பட்டிபுலம் கிராமத்தில், பாதுகாப்பான வீடின்றி, குடிசைகளில் வசிக்கும் இருளர்கள், தங்களுக்கு வீடு கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.கூவத்தூர் அடுத்த கடலூர் கிராமத்தை சேர்ந்த, இருளர் குடும்பத்தினரில் சிலர் பிழைப்புக்காக, பல ஆண்டுகளுக்கு முன்பு, மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் கிராமத்தில் குடியேறினர். இங்கு தற்போது 16 குடும்பத்தினர் உள்ளனர். இவர்கள் கூலி வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில், வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு நிரந்தர இட வசதி இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக, அங்குள்ள ஏரிக்கரையை ஒட்டியுள்ள, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில், குடிசை அமைத்து வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் குடிசைகள் மிகவும் சிறியதாக, தாழ்வாக உள்ளன. தளம் எதுவும் அமைக்கவில்லை. மண் தரையிலே வசிக்கின்றனர்.குழந்தைகளுடன் பாதுகாப்பற்ற சூழலில், கடுமையாக அவதிப்படுகின்றனர். மழைக்காலத்தில் ஏரியிலிருந்து பெருக்கெடுத்து வரும் மழைநீர், குடிசைக்குள் புகுந்து விடுகிறது. அப்போது இடம் தேடி அலைய வேண்டியுள்ளது. இவர்கள் வசிக்கும் தெருவிற்கு, கன்னியம்மன் கோவில் தெரு எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஊராட்சி சார்பில், தெருவிளக்கு, குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.எனினும், தங்களுக்கு நிரந்தரமாக இடம் ஒதுக்கி, அதில் வீடு கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என இருளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து பட்டிபுலம் ஊராட்சி தலைவர் தேவராஜ் கூறும்போது,' அவர்களுக்கு சொந்தமாக இடம் இல்லை. மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வசிக்கின்றனர். அந்த இடத்திற்கு பட்டா வழங்கி, வீடு கட்டித்தர, ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். நடவடிக்கை எடுக்கும்படி, எம்.எல்.ஏ., விடமும் வலியுறுத்தி உள்ளோம்' என்றார்.ம.சங்கர்.