செங்கல்பட்டு : நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை, கிடங்கில் கொட்டாமல், சாலையில் கொட்டுவதால், ஆத்திரமடைந்த ஏழாவது வார்டு மக்கள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.செங்கல்பட்டில், நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள், நகர் ஒதுக்குபுறமாக பழவேரியில் உள்ள, நகராட்சிக்கு சொந்தமான ஆறு ஏக்கர் பரப்பளவு கொண்ட, குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது.கிடங்கை சுற்றி, சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள், நகராட்சிக்கு சொந்தமான டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம், கிடங்கிற்கு கொண்டு வரப்படுகிறது.செங்கல்பட்டில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், குப்பை கிடங்கிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே, நகராட்சி ஊழியர்கள் குப்பை வண்டிகளை, கிடங்கு உள்ளே கொண்டு செல்லாமல், கிடங்கு நுழைவு வாயிலிலேயே கொட்டுகின்றனர்.எனவே, கிடங்கு நுழைவு வாயிலில், குப்பைகள் மலைபோல் குவி ந்துள்ளது. அதை கடந்து செல்லும், ஏழாவது வார்டு மக்கள், துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர்.நேற்று காலை, குப்பைகளை சாலையில் கொட்டிய, இரண்டு டிராக்டர்களை பொதுமக்கள் சிறை பிடித்து, நகராட்சிக்கு திருப்பி அனுப்பினர். பின், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர், காலை 10 மணிக்கு, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.நகராட்சி நுழைவு வாயிலில் அமர்ந்து, நகராட்சிக்கு எதிராக கோஷமிட்டனர். பொறுப்பற்ற முறையில் பணியாற்றும், குப்பை வண்டி டிரைவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோரை, தற்காலிகப் பணி நீக்கம் செய்ய வேண்டுமெ என வலியுறுத்தினர்.தகவலறிந்து, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, தாலுகா இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார், விரைந்து சென்று பொது மக்களை சமாதானப்படுத்தினர். அப்போது எம்.எல்.ஏ., முருகேசன், அங்கு வந்தார். நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுந்தர்ராஜனை அழைத்துக் கொண்டு, ஏழாவது வார்டில் குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தை, நேரில் சென்று பார்வையிட்டார். அந்த குப்பைகளை, மாலைக்குள் அகற்றும்படி உத்தரவிட்டார். இனி, குப்பைகளை சாலையில் கொட்டமாட்டார்கள், என ஏழாவது வார்டு மக்களுக்கு, எம்.எல்.ஏ., உறுதி அளித்தார். அதை ஏற்று மக்கள் கலைந்து சென்றனர்.