உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஓராண்டாக திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் கழிப்பறை

ஓராண்டாக திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் கழிப்பறை

செங்கல்பட்டு தாலுகா அலுவலகத்தில், ஓராண்டிற்கு முன் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாததால், புதர் மண்டி வீணாகிறது.செங்கல்பட்டு தாலுகா அலுவலகம், பழைய கட்டடத்தில் அமைந்துள்ளது. இங்கு, செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள, 150க்கும் மேற்பட்ட கிராம மக்கள், ஜாதிச் சான்று, வருமானச் சான்று, வாரிசு சான்று, சிட்டா, பட்டா நகல் போன்றவற்றை வாங்க வந்து செல்கின்றனர். இவ்வலுவலக வளாகத்தில், 60 ஆண்டுகளுக்கு முன், தாலுகா அலுவலக ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும், தனித்தனியே கழிப்பறைகள் கட்டப்பட்டன.பொது மக்கள் பயன்படுத்தி வந்த கழிப்பறை, முறையான பராமரிப்பு இல்லாததால், 10 ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்து, பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தாலுகா அலுவலகம் வரும் மக்கள், திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தத் துவங்கினர். இதனால், வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசியது.இதைத் தடுக்க, தாலுகா அலுவலக வளாகத்தில், பொதுப் பணித்துறை சார்பில், 4 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கென, புதிய கழிப்பறை கட்டப்பட்டது. பணி முடிந்து ஓராண்டு நிறைவு பெற்றும், கழிப்பறை திறக்கப்படவில்லை. கழிப்பறையை சுற்றி, செடிகள் புதர்போல் மண்டிக் கிடக்கின்றன. இக்கழிப்பறையை, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, செங்கல்பட்டு பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் ஸ்ரீதரன் கூறும்போது, 'தாலுகா அலுவலக வளாகத்தில் கட்டப்பட்ட கழிப்பறையை, கடந்தாண்டு, முறைப்படி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டோம். அவர்கள்தான், பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்' என்றார்.தலைமையிடத்து துணை தாசில்தார் புனிதா கூறும்போது, 'கழிவறைக்கு செல்லும் பாதையில், செடி கொடிகள் மண்டிக் கிடப்பதால், அவற்றை அகற்றித் தரும்படி, பொதுப்பணித் துறையிடம் கேட்டுள்ளோம். ஒரு வாரத்தில், செய்து தருவதாகக் கூறியுள்ளனர். அப்பணி முடிந்ததும், கழிப்பறை, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' என்றார்.-என்.குணாளன்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி