ஏரிக்கரையில் மண் அரிப்பு கொளத்துார்வாசிகள் அச்சம்
ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சியில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 150 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது.இந்த ஏரி நீரை பயன்படுத்தி கொளத்துார், மேட்டு கொளத்துார் ஆகிய கிராமங்களில் 300 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.சமீபத்தில் 'பெஞ்சல்' புயல் காரணமாக பெய்த மழையால், ஏரியின் நீர்மட்டம் அதிகரித்தது. தற்போது, ஏரியில் 80 சதவீதம் தண்ணீர் நிரம்பி உள்ளது.இந்த நிலையில், ஏரியின் மதகு அருகே, ஏரிக்கரையின் உட்புறமாக இரண்டு இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு, கரை சரிந்துள்ளது. இதனால், ஏரிக்கரை எப்போது வேண்டுமானாலும் உடையும் அபாயம் உள்ளதால், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதற்குள், மண் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி, கரையை சீரமைக்க பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.