உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் குறுங்காடு தனியார் தொழிற்சாலை அசத்தல்

இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் குறுங்காடு தனியார் தொழிற்சாலை அசத்தல்

இருங்காட்டுக்கோட்டை:இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், 12.16 ஏக்கர் நிலப்பரப்பில், 5,500 மரங்களை வளர்த்து, தனியார் கார் தொழிற்சாலை அசத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டையில் ஹுண்டாய் கார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையின் சி.எஸ்.ஆர்., எனும் தொழிற்சாலைகள் சமூக பொறுப்பு நிதியில் மூலம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், செம்பரம்பாக்கம் ஏரியை ஒட்டி உள்ள, 12.16 ஏக்கர் பூங்கா நிலத்தில் குறுங்காடு அமைந்துள்ளனர். இங்கு, நீர்மருது, வன்னி, மகிழம், வெண்கடம்பு, மந்தாரை, தான்றி, அத்தி, நாவல் உள்ளிட்ட, 28 வகையான 5,500 நாட்டு மரங்கள் நடப்பட்டுள்ளன. தற்போது, இவை 20 அடி உயரம் வரை வளர்ந்து, பசுமை போர்த்தியுள்ளது. பல வகையான பறவைகளை கவர்ந்து, பல்லுயிர் காடாக விளங்குகிறது. மேலும், இந்த குறுங்காட்டில் சுற்றுச்சூழல் மீட்பு செயல்பாட்டில், சுய உதவி குழு மூலம், 15 பழங்குடி குடும்பத்தினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்கள், கால்நடை தீவனம், செடிகள் ஆகியவற்றை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாய், இங்கு பணியாற்றும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. காடுகளாக புத்துயிர் பெற்றுள்ள இந்த நிலப்பரப்பு, நடைபாதைகள், தண்ணீரை தேக்கி வைக்க குளம், கிராமத்து பாணியிலான குடிசை, தோட்டங்களுடன் ஆழகாய் காட்சியளிக்கிறது. உள்ளூர் மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சுற்றிப்பார்க்க, இந்த பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மற்றொரு பகுதியாக, 1.54 கோடி ரூபாய் மதிப்பில், ஊடு பயிர் முறையில் காய்கறி செடிகள் உள்ளிட்ட 11 லட்சம் மரக்கன்றுகளை உருவாக்குதல், கால்நடை தீவனம், பழங்கள் மற்றும் நாட்டு மரக்கன்றுகளை, 2027க்குள் உருவாக்கும் திட்டமும் அண்மையில் துவக்கப்பட்டுள்ளதாக, ஹுண்டாய் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !