காஞ்சிபுரம், புத்தக வாசிப்பை ஊக்குவிக்கவும், மாணவர்களின் படைப்புத்திறனை வெளிக்கொணர்ந்து சிறந்த இளம் எழுத்தாளர்களாக உருவாக்கும் நோக்கில், 'எழுதுக புத்தகம்' இயக்கம் சார்பில், புத்தகம் எழுத பயிற்றுவிக்கும் ஒரு நாள் நேரடி பயிலரங்கம் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.காஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் உதவி கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார்.காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் பயிலரங்கை துவக்கி வைத்தார். பொது நுாலக இயக்கக துணை இயக்குனர் இளங்கோ சந்திரகுமார் முன்னிலை வகித்தார்.இதில், எழுத்தாளர்கள் முனைவர் கார்த்திகேயன், எழுத்தாளர் நீதிமணி, கவிஞர் கவிப்பித்தன், பாலாறு பதிப்பகம் பதிப்பாளர் சரவணபாரதி, எழுத்தாளர் நாராயணீ கண்ணன் ஆகியோர் மாணவ - -மாணவியருக்கு புத்தகம் எழுத பயிற்சி வழங்கினர்.இதில், காஞ்சிபுரம், சென்னை, கிருஷ்ணகிரி,சேலம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், செங்கல்பட்டு, அரியலுார் ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த 200 மாணவ - மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.நிகழ்ச்சி ஏற்பாட்டை 'எழுதுக புத்தகம்' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சுகுமாறன், பூங்குழலி, பாலச்சந்தர், கிள்ளிவளவன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.