காஞ்சியில் கோடிகளில் புரளும் உள்ளாட்சிகள்...அம்பலம்!:12 ஊராட்சிகளை கண்காணிக்க குழு நியமனம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு கோடி ரூபாய்கும் மேல் செலவு செய்த 12 ஊராட்சிகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. பல லட்சங்களே செலவு செய்ய வேண்டிய நிலையில், பல கோடி ரூபாய் ஊராட்சி நிர்வாகங்கள் செலவு செய்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், பொது நிதி, மின் கட்டணம், ஊதிய கணக்கு, துாய்மை காவலர் ஊதியம் உள்ளிட்ட 12 விதமான வங்கி கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், பசுமை வீடு வழங்கும் திட்டம் ஆகிய நான்கு விதமான வங்கி கணக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.பொது நிதி கணக்கு, மின் கட்டணம் செலுத்துதல் கணக்கு, ஊதிய கணக்கு, துாய்மை காவலர் ஊதிய கணக்கு உள்ளிட்ட பல்வேறு விதமான வங்கி கணக்குகள் மட்டுமே டிஎன் பாஸ் என, அழைக்கப்படும் எளிமை படுத்தப்பட்ட ஊராட்சி வங்கி கணக்கு வாயிலான பணம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. எந்த ஒரு ஊராட்சியாக இருந்தாலும், 2 லட்ச ரூபாய் வரைக்கும் பணி தேர்வு செய்து, ஊராட்சி தலைவரே வளர்ச்சி பணி செய்யலாம். அதற்குமேல், 5 லட்ச ரூபாய் வரையில், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அனுமதி பெற்று வளர்ச்சி பணிகள் செய்யலாம். அதற்கு மேல், கலெக்டரிடம் அனுமதி பெற்று வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டும்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், சில ஊராட்சிகளில் அளவுக்கு அதிகமாக பணம் செலவிடப்பட்டு உள்ளது என, எளிமை படுத்தப்பட்ட வங்கி கணக்கு மூலமாக ஊரக வளர்ச்சி துறைக்கு தெரிய வந்தள்ளது.குறிப்பாக, தொழிற்சாலைகள் நிறைந்த பெரும்பாலான ஊராட்சிகளில், ஒரு கோடி ரூபாய் முதல், 5 கோடி ரூபாய் வரையில் பணம் செலவிடப்பட்டுள்ளது என, தெரிய வந்துள்ளது.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், போந்துார், பண்ருட்டி, சிறுமாங்காடு, இருங்காட்டுக்கோட்டை, போந்துார், திருமங்கலம் உள்ளிட்ட 12 ஊராட்சிகளில் அளவுக்கு அதிகமாக பணம் செலவிடப்பட்டுள்ளது.குறிப்பாக, 2024-- 25ம் நிதி ஆண்டு ஏழு மாதங்களில், 27.89 கோடி ரூபாய்க்கு செலவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சிகளில் அளவுக்கு அதிகமாக பணம் செலவிடப்பட்டு இருப்பது, துறை அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஊராட்சிகளில் செலவிடப்பட்ட நிதி முறையாக செலவிடப்பட்டுள்ளதா என, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அந்தஸ்தில் ஆய்வுக்குழுவினரை நியமித்து, வரவு, செலவு கணக்குகளை கண்காணிக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சி துறை உயரதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.இதை ஏற்று, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் அதிகம் செலவிடப்பட்ட ஊராட்சிகளின் வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்யும் பணியை துவக்கி உள்ளனர். இதில், முறைகேடுகளில் ஈடுபட்டிருந்தால், ஊராட்சி தலைவர்களின் பதவிக்கு குந்தகம் ஏற்படும் அபாயம் உள்ளது என, ஊராட்சி தலைவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அதிக பணம் செலவழிக்கப்பட்டு இருக்கும் ஊராட்சிகளின் வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்து வருகிறோம்.ஊராட்சிகளுக்கு தேவையான செலவினங்களை மட்டுமே, ஊராட்சி நிர்வாகத்தில் இருந்து செய்ய வேண்டும் என, அறிவுரை வழங்கி உள்ளோம்.முறைகேடு நடந்திருந்தால், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
அதிக பணம் செலவழித்த ஊராட்சி விபரம்:
ஊராட்சிகள்/ நிதி(கோடி ரூபாயில்)கீவளூர்/ 1.55பால்நல்லுார்/ 1.63சென்னக்குப்பம்/ 1.64தண்டலம்/ 1.65மாம்பாக்கம்/ 1.69திருமங்கலம்/ 1.78வரதராஜபுரம்/ 2.16காட்ரம்பாக்கம்/ 2.27இருங்காட்டுக்கோட்டை/ 2.55போந்துார்/ 2.95சிறுமாங்காடு/ 3.50பண்ருட்டி/ 4.52மொத்தம் / 27.89
கட்டுப்படுத்தலாம்
பல்வேறு ஊராட்சிகளில், குடிநீர் பணிகள் சரி செய்வதற்கும், ஊராட்சி செயலருக்கு சம்பளம் வழங்குவதற்கும் நிதி ஆதாரம் இல்லாத சூழலில் உள்ளாட்சி நிர்வாகங்கள் பரிதவித்து வருகின்றன.தொழிற்சாலைகள் நிறைந்த ஊராட்சிகளில், பல கோடி ரூபாய் வரியினங்களின் வாயிலாக வருவாய் கிடைத்தும், செலவினங்களை சிக்கனமாக கையாளவில்லை.உள்ளாட்சி பிரதிநிதிகள், 15 சதவீத கமிஷன் பெற்றுக்கொண்டு, நிதியை தாராளமாக வளர்ச்சி பணிக்குசெலவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஆய்வு குழுவினரை ஊரக வளச்சி துறை களம் இறங்கி உள்ளது. வரவு, செலவு கணக்கு பார்க்கும் அதிகாரிகள் விலை போகாமல் இருந்தால், செலவினங்களை கட்டுப்படுத்த முடியும்.