உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பட்டா திருத்தம் செய்யக்கோரி 6 ஆண்டுகளாக அலையும் நபர்

பட்டா திருத்தம் செய்யக்கோரி 6 ஆண்டுகளாக அலையும் நபர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிற்கு உட்பட்ட சுங்குவார்சத்திரம் அருகேயுள்ள சோகண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர், தன் சகோதரருடன், நீதிமன்ற உத்தரவு வாயிலாக, சொத்துக்களை பாக பிரிவினை செய்து கொண்டார்.அதன்படி, இவருக்கு சேர வேண்டிய சொத்துக்களின் பட்டா விபரங்கள், வேறு நபர்களின் பெயரில் இடம்பெற்றிருப்பது இவருக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது. சோகண்டி கிராமத்தில், 59 சென்ட் நிலம் வேறு நபரின் பெயரில் உள்ளதால், அதை ரத்து செய்து, தன் பெயரில் பட்டா மாற்றம் செய்ய, 2014ம் ஆண்டு முதல் மனு அளித்து வந்தார்.

சப் - கலெக்டர் உத்தரவு

கடந்த 2019ல், காஞ்சிபுரம் சப் - கலெக்டராக பணியாற்றிய சரவணன், இந்த மனுவை விசாரித்து, பட்டாவை ரத்து செய்து, கோவிந்தராஜ் பெயருக்கு பட்டா விபரங்களை மாற்றம் செய்ய, ஸ்ரீபெரும்புதுார் தாசில்தாருக்கு உத்தரவிட்டிருந்தார்.ஆனால், கடந்த 2019ம் ஆண்டு முதல், தற்போது வரையிலான ஆறு ஆண்டுகளாக பட்டா திருத்தம் செய்வதற்கு, கோவிந்தராஜ் அலைந்து கொண்டிருப்பதாக புகார் தெரிவிக்கிறார்.சொத்தின் பட்டா விபரங்கள் வேறு நபரின் பெயரில் இருப்பதை, சப் - கலெக்டர் உறுதி செய்து உத்தரவிட்ட பின்னும், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா அலுவலகத்தில், ஆறு ஆண்டுகளாக அலைக்கழிப்பதாக கவலை தெரிவிக்கிறார்.தாலுகா அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்காததால், கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பலமுறை அளித்துள்ளார். ஆனால், இதுவரை பட்டா திருத்தம் மேற்கொள்ளாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகிறது.பட்டா திருத்தம் செய்ய வருவாய் துறை அலுவலகங்களுக்கு ஆறு ஆண்டுகளாக அலைகிறேன். நடவடிக்கை எடுத்தபாடில்லை. கொரோனா பரவல் சமயத்தில், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா அலுவலகத்தில் என்னுடைய கோப்புகளையும் தொலைத்துவிட்டனர். அதையும் தேடி எடுத்து அலைந்து கொண்டிருக்கிறேன். மன உளைச்சலாக உள்ளது.- கே.கோவிந்தராஜ்,சோகண்டி,ஸ்ரீபெரும்புதுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ