பரந்துார், வரதாபுரம் தடத்தில் மினி பேருந்து சேவை
காஞ்சிபுரம்:பரந்துாரை சுற்றியுள்ள சில கிராமங்கள் உள்ளடக்கிய பகுதியில், பரந்துார் பசுமை விமான நிலையம் அமைய உள்ளது. இருப்பினும், பரந்துார் கிராமத்திற்கு போதிய பேருந்து வசதி இல்லை.குறிப்பாக, காஞ்சிபுரத்தில் இருந்து, செல்லம்பட்டிடை, அக்கமாபுரம், வரதாபுரம் உள்ளிட்ட கிராமப்புற பேருந்துகளின் வாயிலாகவே, கிராமமப்புற மக்கள் காஞ்சிபுரத்தில் இருந்து பரந்துார் மற்றும் பரந்துாரில் இருந்து காஞ்சிபுரத்திற்கு சென்று வந்தனர்.இதில், வரதாபுரம் கிராமத்திற்கு இயக்கப்படும் தடம் எண் -49 அரசு பேருந்து கொரோனா கால கட்டங்களில் நிறுத்தப்பட்டது.இதனால், காஞ்சிபுரத்தில் இருந்து பரந்துார் செல்வோர் சிரமத்துடன் செல்ல வேண்டி உள்ளது. இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் இருந்து பரந்துார் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து, சிறுவாக்கம் கிராமம் வழியாக வரதாபுரம் வரை என, இரு வழித்தடங்களில் மினி பேருந்து சேவை இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்து சேவை ஜூன் 15ம் தேதி முதல் துவக்கப்படும் என, மினி பேருந்து சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.