சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் குன்றத்துாரில் வாகன ஓட்டிகள் அவதி
ஸ்ரீபெரும்புதுார்: குன்றத்துார் சாலையில் இஷ்டம்போல் சுற்றி திரியும் மாடுகளால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி அருகே, பிரிந்து செல்லும் சாலை வழியாக, குன்றத்துார், போரூர், மணிமங்கலம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே, கச்சிப்பட்டு பகுதிகளில் மாடுகளை வளர்த்து வருபவர்கள், தங்களின் மாடுகளை, கொட்டகையில் கட்டிவைத்து பராமரிப்பது இல்லை. மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள், குன்றத்துார் சாலையை வழிமறித்து கூட்டமாக நிற்கின்றன. திடீரென அவை சாலையின் குறுக்கே ஓடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, சாலையில் நிற்கும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர் பார்க்கின்றனர்.