வாகனம் மோதி சேதமான சோலார் சிக்னலை மாற்றி அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
ஸ்ரீபெரும்புதுார்: ஒரகடம் அருகே, வல்லம் சந்திப்பில், லாரி மோதியதில் சேதமடைந்த தானியங்கி சோலார் சிக்னலை மாற்றி அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஒரகடம் அருகே, வல்லம் -வடகால் சிப்காட் தொழில்பூங்காவில் 150க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு மூலப்பெருட்கள் மற்றும் உதிரி பாகங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், தொழிற்சாலை பேருந்துகள், ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையில், வல்லம் சந்திப்பு வழியே சென்று வருகின்றன. இந்த நிலையில், வல்லம் சந்திப்பில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் நடந்து வருகின்றன. உள்ளூர் வாசிகளும் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கி வருகின்றனர். இதையடுத்து, வல்லம் சந்திப்பில் சிக்னல் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, தனியார் நிறுவனத்தின் பங்களிப்பில், வல்லம் சந்திப்பில் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், சந்திப்பில் திரும்பிய லாரி ஒன்று தானியங்கி சிக்னல் மீது மோதியதில் சேதமடைந்தது. இதனால், ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையில், தாறுமாறாக செல்லும் வாகனங்களால், சந்திப்பை கடக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள், விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே, சேதமடைந்த தானியங்கி சோலார் சிக்னலை, சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.