| ADDED : பிப் 04, 2024 06:08 AM
சென்னை : வியாசர்பாடி, பள்ளி தெருவைச் சேர்ந்தவர் தாமோதர கண்ணன், 24.இவர், சினிமா துறையில் துணை நடிகராக உள்ளார். கடந்த ஒரு மாதமாக 'ஆன்லைன் ஆப்' ஒன்றை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தார்.அதில், அகிலா என்ற பெண் குறுந்தகவல் மூலம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். பின் இருவரும் சாட்டிங் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், தனக்கு பணம் அனுப்பினால், தன் ஆபாச வீடியோக்கள் அனுப்புவதாக தெரிவித்துள்ளார். இதை நம்பிய தாமோதர கண்ணன், 1,000 ரூபாய் அனுப்பினார். பின் அகிலாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரு நபர் தாமோதர கண்ணனின் மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு, 'தான் சைபர் கிரைம் போலீஸ்' என தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், 'அகிலா என்ற பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும், அதற்கு நீங்கள் அவரிடம் தவறாக பேசி பணம் அனுப்பியது தான் காரணம்' என்றும் அச்சுறுத்தும் வகையில் பேசி உள்ளார். மேலும், இது குறித்து வழக்கு போடாமல் இருக்க, 60,000 ரூபாய் தரவேண்டும் எனவும் மிரட்டியுள்ளார். இதை நம்பிய தாமோதரன், 14,000 ரூபாய், அந்த நபரின் 'ஜிபே' எண்ணிற்கு அனுப்பியுள்ளார். பின் அந்த நபரின் மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.இது குறித்து, தாமோதர கண்ணன் வியாசர்பாடி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.