வயிற்றுப்போக்கு, வயிற்று வலியால் பாதிப்போர்...அதிகரிப்பு:வாரத்திற்கு 2,000 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை
காஞ்சிபுரம்:கோடை வெயிலின் தாக்கம் உள்ள நிலையில், காஞ்சிபுரம் மருத்துவமனைகளில் வாரத்திற்கு 2,000க்கும் மேற்பட்டோர், வயிற்றுப்போக்கு, வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். மதியம் நேரத்தில் வெளியில் சென்றால் நீர்ச்சத்து குறைபாடு, ஹீட் ஸ்ட்ரோக் எனும் வெப்ப வாதம் போன்ற பாதிப்பு ஏற்பட்டு மயக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி பாதிப்பு ஏற்படலாம். அதிக வெப்பம் நிலவும் மதியம் 12:00 மணி முதல் 3:00 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் அறிவுறுத்தி வருகிறது.காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மருத்துவமனை என, 20 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் ஒரு வாரத்திலே 2,000க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி போன்ற காரணங்களால் சிகிச்சை பெற்றுள்ளனர். தினம் 100 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இதற்கு மற்றொரு காரணமாக, மாம்பழம் சீசனும் இருக்கலாம் என கூறப்படுகிறது.தற்போது, மாம்பழம் வரத்து அதிகமாக உள்ளது. விலையும் மலிவாக இருப்பதால், பலரும் அதிகளவில் மாம்பழம் சாப்பிடுகின்னறர்.கார்பைடு கற்களால் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிடுவதால், வயிற்று வலி, பேதி உள்ளிட்டவை ஏற்படலாம் என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் நகரவாசிகள் கூறியதாவது:மாவட்டத்தில் பலருக்கும் வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி ஏற்பட்டு வருகிறது. அதற்கு செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களும் ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், பழ கிடங்குகளை உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்த வேண்டும்.கார்பைடு கற்களால் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றவா என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏற்கனவே வாழைப்பழம் மீது, ரசாயன கலவை அடிக்கப்படுவதாக எழுந்த புகார்கள் மீது, பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அதிக எண்ணிக்கையில் மாம்பழம் சாப்பிடுவதாலும், தோலுடன் சாப்பிடுவதாலும் பலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. வயிற்று வலியுடன் மருத்துவமனை வரும் பலரிடம் கேட்டதற்கு, மாம்பழம் அதிகளவில் சாப்பிட்டதாக தெரிவிக்கின்றனர். கோடை காலம் என்பதால், பரவலாக பலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. அளவோடு மாம்பழம் சாப்பிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.காஞ்சிபுரம் உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:காஞ்சிபுரத்தில் பெரிய அளவிலான மாம்பழம் கிடங்கு ஏதுமில்லை. கோயம்பேடு சந்தையில் இருந்துதான், வியாபாரிகள் வாங்கி வந்து மாம்பழங்களை விற்பனை செய்கின்றனர்.இருப்பினும், கடைகளில் ஆய்வு நடத்தி வருகிறோம். கார்பைடு கல் வாயிலாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.