காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகருக்கு வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து, பட்டுசேலை வாங்க அன்றாடம் வெளியூர்வாசிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் வெளியூர்வாசிகள், பட்டு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் கடைகளில் பட்டுசேலை, பட்டுவேட்டி போன்றவை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். முகூர்த்த நாட்கள், பண்டிகை போன்ற விசேஷ நாட்களில், பட்டுசேலை வியாபாரம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது.மேலும், பட்டுசேலை வாங்குவதற்காகவே, கர்நாடகா, ஆந்திர மாநிலத்தில் இருந்து ஆர்வத்துடன் வருகின்றனர். அவ்வாறு வரும் வெளியூர்வாசிகளை குறிவைத்து பட்டுசேலை தரகர்கள் ஏமாற்றி போலி பட்டுசேலைகளை விற்பது வாடிக்கையாகி வருகிறது. இதனால், காஞ்சி பட்டுசேலையின் பெருமை, ஊரின் நன்மதிப்பு போன்றவை பாழாகிறது. இவற்றை தடுக்க ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், தமிழ் ஆகிய ஐந்து மொழிகளில், விழிப்புணர்வு பதாகைகளை நகரின் மூலை முடுக்குகளில் வைக்க வேண்டும் என, நெசவாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஐந்து மொழிகளில் விழிப்புணர்வு பதாகைகள் தயாராகி வருவதாகவும், நகரின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் ஓரிரு வாரத்தில் வைக்கப்படும் என, கைத்தறி துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதில், மத்திய அரசின் கைத்தறி முத்திரை, சில்க் மார்க், ஜரிகையின் உண்மைத்தன்மை குறியீடு, புவிசார் குறியீடு போன்ற முத்திரைகள் பற்றி தெளிவாகக் குறிப்பிட்டிருக்கும் என, கைத்தறி துறையினர் தெரிவித்துள்ளனர்.