உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தொழில் பூங்காவுக்கு விளைநிலம் கையகப்படுத்த எதிர்ப்பு...நாங்க எங்கே போறது?:ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளை சூழ்ந்த விவசாயிகள்

தொழில் பூங்காவுக்கு விளைநிலம் கையகப்படுத்த எதிர்ப்பு...நாங்க எங்கே போறது?:ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளை சூழ்ந்த விவசாயிகள்

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே அமையும் சிப்காட் தொழில் பூங்காவிற்காக, எச்சூர் கிராமத்தில் 500 ஏக்கர் வேளாண் விளைநிலத்தை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாவட்ட வருவாய் அலுவலகத்தில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், 'விவசாய இடத்தை நீங்கள் எடுத்தால், பிழைப்புக்கு நாங்க எங்கே போறது' எனக்கேட்டு, அதிகாரிகளை விவசாயிகள் சூழ்ந்ததால், பதில்கூற முடியாமல் அதிகாரிகள் திணறினர். தமிழகத்தில், தொழில் வளர்ச்சிக்கு உகந்த மாவட்டமாக சென்னை அருகே காஞ்சிபுரம் உள்ளது. இங்கு, ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், பிள்ளைப்பாக்கம், வல்லம் -வடகால், இருங்காட்டுக்கோட்டை என, ஐந்து இடங்களில் சிப்காட் தொழிற்பூங்காக்களும். அதோடு, மருத்துவ சாதனங்கள் பூங்கா, வானுார்தி பூங்கா என, ஏழு தொழிற்பூங்காக்களும் செயல்பட்டு வருகின்றன. இங்கு, 2,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. தமிழகத்தின் மொத்த ஏற்றுமதியில் காஞ்சிபுரம் முதல் இடத்தில் உள்ளது. குறிப்பாக, எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் மொத்த 'ஸ்மார்ட்போன்' உற்பத்தியில், 40 சதவீதம் ஸ்ரீபெரும்புதுாரில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல, தொழில், வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதால், தமிழகத்தின் 38 மாவட்டங்களில், தனிநபர் வருமானத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளதாக, மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, தொழிற்பூங்கா மற்றும் தொழிற்சாலை தேவைக்கான நிலங்களை வழங்கிய இப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தொழிற்சாலையில் இருந்த வெளியேறும் கழிவு, புகை உள்ளிட்டவற்றால், காற்று, நிலத்தடி நீர், நீர்நிலைகள் பெருவாரியாக மாசடைந்து வருகின்றன. இந்நிலையில், ஸ் ரீபெரும்புதுார் அருகே எச்சூரில், 750 ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக, ஸ்ரீபெரும்பு துார் தாலுகா எச்சூர், மேட்டுப்பளையம், பூதனுார் ஆகிய கிராமத்திற்குட்டட்ட 750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணியை சிப்காட் நிர்வாகம் துவங்கியுள்ளது. அதில், 500 ஏக்கர் விவசாயம் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதால், எச்சூர் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு, எச்சூர், மேட்டுப்பாளையம், பூதனுார் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்பகுதி விவசாயி ஒருவர் கூறியதாவது: ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில் ஐந்து சிப்காட் தொழிற் பூங்காக்கள் இயங்கி வருகின்றன. தொழிற்சாலை வருகைக்கு பின், இப்பகுதிகளில் விவசாயம் வெகுவாக குறைந்துள்ளது. எச்சூர் கிராமத்தில் பிரதான தொழிலாக, 1,000 ஏக்கருக்கு மேல் விவசாயம் நடக்கிறது. ஆண்டிற்கு மூன்று போகம் இப்பகுதியில் விளைந்தாலும், சிப்காட் நிறுவனத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால், விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ள இப்பகுதி மக்கள் பெரும் பாதிப்பை சந்திக்கக் கூடும். விவசாயம் தடைபட்டால் நெல் உற்பத்தி பாதிப்படைவதோடு, கால்நடைகளும் பாதிப்படையும். பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக கூறி, விவசாயத்தையும், விவசாயிகளையும் வஞ்சிக்கும் இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும். விவசாயம் அல்லாத இடங்களை தேர்வு செய்து, தொழிற்பூங்காவை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து சிப்காட் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கூறியதாவது: நில உரிமையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் சிப்காட் நிர்வாக உயர் அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அதன்படி, பரிசீலனை செய்யப்பட்டு அடுத்தக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். சிறப்பு அலுவலர் பங்கேற்கவில்லை எச்சூர், மேட்டுப்பாளையம், பூதனுார் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்பட உள்ள நில உரிமையாளர்கள் கோரிக்கை மற்றும் ஆட்சேபனை தெரிவிக்கும் கூட்டம், பிள்ளைப்பாக்கத்தில் உள்ள சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலத்தில் நேற்று நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், பெண்கள், கிராம மக்கள் பங்கேற்றனர். இதில், முக்கிய அதிகாரியான சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்கவில்லை. அடுத்தநிலை அலுவலர்கள் தலைமையில் கூட்டம் நடந்தது. இதனால், உரிய விபரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் சிரமம் அடைந்தனர். - - கு. அன்பரசன், 35, விவசாயி, எச்சூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை