உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  ஒரத்துார், வரதராஜபுரம் தடுப்பணை பணிகள்... முடக்கம் !

 ஒரத்துார், வரதராஜபுரம் தடுப்பணை பணிகள்... முடக்கம் !

குன்றத்துார் : காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பை குறைக்க, அடையாறு கால்வாய் குறுக்கே, ஒரத்துார் மற்றும் வரதராஜபுரத்தில், 67 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட தடுப்பணை பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. நான்கு பணிகள் நடக்காததால், தடுப்பணை பகுதியில் மண் கடத்தலும், மதகை உடைத்து இரும்பு பொருட்களை களவாடுவதும் அதிகரித்து வருகின்றன.காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே ஆதனுார், ஒரத்துார், சோமங்கலம் ஆகிய மூன்று பகுதிகளில் துவங்கும் அடையாறு கால்வாய், வரதராஜபுரத்தில் ஒன்றாக இணைந்து, புறநகர் மற்றும் சென்னையில் 42 கி.மீ., துாரம் பாய்ந்தோடி, பட்டினப்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது.வடகிழக்கு பருவமழை காலங்களில், அடையாறு கால்வாயில் பெருக்கெடுக்கும் வெள்ள நீரால் புறநகர் பகுதிகளான வரதராஜபுரம், முடிச்சூர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில் சூழ்வது ஆண்டுதோறும் தொடர்கதையாக நடந்து வருகிறது.புறநகரில் வெள்ள பாதிப்பை குறைப்பதற்கும், சென்னையின் எதிர்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், அரசு நடவடிக்கை எடுத்தது.அதன்படி, படப்பை அருகே, ஒரத்துாரில் துவங்கும் அடையாறு கால்வாய், அதன் இருபுறமும் உள்ள ஒரத்துார் மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து, 1 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில், புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி, 56 கோடி ரூபாயில், 2019ல் அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கியது.நீர்த்தேக்கத்திற்காக அடையாறு கிளை கால்வாய் குறுக்கே, ஐந்து கண் மதகு அமைத்து, அங்கிருந்து ஆரம்பாக்கம் ஏரி வரை கரை அமைக்கப்பட்டது.இதேபோல், மதகில் இருந்து ஒரத்துார் ஏரி வரை 420 மீட்டருக்கு கரை அமைக்கும் பணிக்கு 84 ஏக்கர் பட்டா நிலம் கையகப்படுத்தவில்லை. இதனால், நீர்த்தேக்கம் அமைக்கும் பணி 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில், எஞ்சிய பணிகள் நான்கு ஆண்டுகளாக முடங்கியுள்ளது.நீர்த்தேக்க பணிகள் கிடப்பில் உள்ளதால், கரை முழுதும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்தும் கரைகள் பலவீனமாகியும்வருகின்றன.ஒரத்துார் நீர்த்தேக்க பணியின் நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. விரைவில் பணிகள் துவங்க உள்ளன. வரதராஜபுரம் அணைக்கட்டு தாங்கல், முடிச்சூர் தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பு குறித்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினோம். ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.- பொதுப்பணித் துறை அதிகாரிகள்

அமோகம்

ஒரத்துார் நீர்த்தேக்க பணிகள் முடங்கி கிடப்பதால், அதிகாரிகள், கட்டுமான பணியாளர்கள் என, யாரும் இருப்பதில்லை. நீர்த்தேக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஐந்து கண் மதகில் உள்ள இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி திருடி சென்றுள்ளனர். மேலும், அங்கு கற்கள், மண் திருட்டும் நடந்து வருகிறது.

விவசாயிகள் அதிருப்தி

நீர்த்தேக்கம் அமைவதால் ஏற்படும் சிக்கல் குறித்து விவசாயிகள் கூறியதாவது:ஒரத்துார் நீர்த்தேக்கம் அமைக்கும் பணி நடக்காமல் இருந்தால் ஒரத்துார், ஆரம்பாக்கத்தில் உள்ள 600 ஏக்கர் விவசாய நிலத்தில், ஆண்டுக்கு இரண்டு போகம் விவசாயம் நிம்மதியாக செய்திருப்போம்.நீர்த்தேக்கம் கட்டுமானம் என்ற பெயரில், ஒரத்துார் மற்றும் ஆரம்பாக்கம் ஏரி கரைகளை உடைத்து எடுத்துவிட்டதால், ஏரிகளில் போதிய தண்ணீர் இன்றி விரைவாக வறண்டு விடுகிறது.மேலும், ஒரத்துாரில் 84 ஏக்கர் பட்டா நிலத்தை அரசு கையகப்படுத்தி அதற்குமாற்றாக வேறு பகுதிகளில் மாற்று நிலம் தருவதாக அரசு அதிகாரிகள் கூறி, காலம் தாழ்த்துகின்றனர். எங்களுக்கு மாற்று நிலம் வேண்டாம். நிலத்திற்கான தொகையை கொடுங்கள்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆக்கிரமிப்பை அகற்றாமல் பணி

படப்பை அருகே, ஆதனுார் துவங்கும் அடையாறு கால்வாயில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 30 ஏரிகளின் உபரி நீர் கலக்கிறது. முடிச்சூர் தாங்கல் ஏரி, வரதராஜபுரம் அணைக்கட்டுதாங்கல் ஏரியை கடந்து, அடையாற்றில் உபரிநீர் செல்கிறது.மொத்தம் 48 ஏக்கர் பரப்பளவு உடைய வரதராஜபுரம் அணைக்கட்டு தாங்கல் ஏரியையும், இதன் அருகே 51 ஏக்கர் பரப்பளவில் உள்ள முடிச்சூர் தாங்கல் ஏரியையும் இணைத்து, அடையாறு கால்வாயில் தடுப்பணை கட்ட, பொதுப்பணி துறையினர் முடிவு செய்தனர்.இதையடுத்து 2020ம் ஆண்டு வரதராஜபுரம் அணைக்கட்டு தாங்கல் ஏரியையும், அடையாறு கால்வாயையும் இணைத்து 11 கோடி ரூபாய் மதிப்பில் ஷட்டர்களுடன் கூடிய 12 கண் மதகு கட்டப்பட்டது. இந்த இரண்டு ஏரி முழுதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு 1,500க்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுஉள்ளன. இதனால், ஏரி இருக்கும் அடையாளமே மாறி, சமவெளி பகுதி போல் காட்சியளிக்கிறது.ஏரி ஆக்கிரமிப்பை அகற்றாமல், 12 கண் மதகு மட்டும் கட்டி 11 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. வரதராஜபுரம் அணைக்கட்டுதாங்கல் தடுப்பணை, ஒரத்துார் தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டால் வரதராஜபுரம், முடிச்சூர் வெள்ள பாதிப்பு மேலும் குறையும். வறட்சி காலத்தில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும். எனவே, முடங்கியுள்ள இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி