செய்யாற்றில் கொட்டப்படும் குப்பை கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்
உத்திரமேரூர்:-வெங்கச்சேரி செய்யாற்றில் குப்பை கொட்டுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்திரமேரூர் தாலுகா, வெங்கச்சேரி கிராமத்தில் செய்யாறு உள்ளது. இந்த ஆறு சுற்றுவட்டார பகுதிகளின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில், செய்யாற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தின் கீழே, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குப்பை கொட்டி வருகின்றனர்.அதில், பிளாஸ்டிக் பொருட்கள், உணவு கழிவுகள், துணி மூட்டைகள் உள்ளிட்டவை ஆற்றிலே கொட்டப்படுகின்றன. அவ்வாறு கொட்டப்படும் குப்பையை பன்றி உள்ளிட்ட விலங்குகள் கிளறுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. வெங்கச்சேரி பகுதியில் உள்ள குடியிருப்புகளில், ஊராட்சி நிர்வாகத்தினர் துாய்மை பணியாளர்களை கொண்டு குப்பை சேகரிக்க முன் வருவதில்லை. இதனால், அப்பகுதியில் வசிப்போர் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பையை ஆற்றிலே கொட்டும் சூழல் தொடர்ந்து வருகிறது. வெங்கச்சேரி செய்யாற்றில் கொட்டப்படும் குப்பை நீரில் கலக்கும்போது, நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு, அதை குடிநீராக பயன்படுத்தும்போது உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வெங்கச்சேரி செய்யாற்றில் குப்பை கொட்டுவதை தடுக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.