குப்பை மேடாக மாறிய குடியிருப்பு பகுதி மாறி மாறி கைக்காட்டும் ஊராட்சிகள்
ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரத்தில், திருமங்கலம் மற்றும் மொளச்சூர் ஊராட்சிகளின் எல்லை பகுதியில், குடியிருப்பு அருகே குவிந்துள்ள குப்பை கழிவுகளை அகற்றுவதில் சிக்கல் நிலவி வருகிறது. குப்பை கழிவுகளை அகற்றுவதில், இரண்டு ஊராட்சிகளும் அலட்சியம் காட்டி வருவதுடன், மாறி மாறி கைக்காட்டி வருகின்றனர். திருமங்கலம் ஊராட்சி பள்ளத் தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மொளச்சூர், திருமங்கலம் ஊராட்சி களின் எல்லை பகுதியாக உள்ளது. சுங்குவார்சத்திரம் பஜாரில் இருந்து, மொளச்சூர் ஊராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு செல்வோர் இந்த தெரு வழியாக சென்று வருகின்றனர். அதேபோல, சுங்குவார்சத்திரம் சார் - -பதிவாளர் அலுவலகம், மொளச்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இவ்வழியாக ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்த நிலையில், திருமங்கலம் மற்றும் மொளச்சூர் ஊராட்சிகளின் எல்லையாக உள்ள இந்த பகுதியில், துாய்மை பணியாளர்கள் முறையாக குப்பை கழிவுகளை சேகரிக்க வருவதில்லை. இதனால், இப்பகுதி மக்கள் சாலையோரம் உள்ள காலி மனைகளில் குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். குடியிருப்பு அருகே குவிந்துள்ள குப்பை கழிவுகளால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசி வருகிறது. அதே போல, அப்பகுதியில் குவிந்துள்ள குப்பை கழிவுகளில் பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குப்பை கழிவுகளில் உணவிற்காக வரும் பன்றிகளால் நோய் தொற்று பரவும் அபாயம் எழுந்துள்ளது. குப்பை கழிவுகளை அகற்றுவதில் இரண்டு ஊராட்சிகளும் அலட்சியம் காட்டி வருகிறது. நாங்கள் இல்லை அந்த ஊராட்சிதான் அகற்ற வேண்டும் என, மாறிமாறி கைக்காட்டி வருகின்றனர். எனவே, அப் பகுதியில் தேக்கம்அடைந்துள்ள குப்பை கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.