உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மத்திய நிதியை செலவிடாமல் ஊராட்சிகள்.மெத்தனம்

மத்திய நிதியை செலவிடாமல் ஊராட்சிகள்.மெத்தனம்

காஞ்சிபுரம் :மத்திய அரசு வழங்கிய நிதியை, திட்டப் பணிகளுக்கு செலவிடாமல் பல ஊராட்சிகள் முடக்கி வைத்து மெத்தனம் காட்டியுள்ளன. முடக்கியுள்ள நிதியை திருப்பித் தரும்படி அரசு கேட்டுள்ளதால், ஊராட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களின் கீழ், 247 ஊராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. ஊராட்சிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப, சாலை, குடிநீர், கட்டடம் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, ஆண்டிற்கு ஒரு முறை மத்திய நிதிக்குழு மானியம் வழங்குகிறது. இந்த நிதியை, ஊரக வளர்ச்சித் துறை, இரு தவணைகளாக பிரித்து ஊராட்சிகளுக்கு வழங்குகிறது. இதில், 30 சதவீதம் சுகாதார பணிகள்; 30 சதவீதம் குடிநீர் வளர்ச்சி பணிகள்; 40 சதவீதம் அரசு கட்டடம் மறுசீரமைப்பு ஆகிய பணிகளை, ஊராட்சிகள் மேற்கொள்ளலாம் என, அறிவுரை வழங்கப் பட்டுள்ளது. ஒரு சில ஊராட்சிகளில், மத்திய நிதிக் குழு மானிய நிதியை, மின் கட்டணம், குடிநீர் கட்டணம் செலுத்த பயன்படுத்தும்படி, ஊரக வளர்ச்சி துறையினர் பரிந்துரை செய்கின்றனர். அதன்படி ஊராட்சி நிர்வாகங்கள், கட்டணத்தை செலுத்தி விடுகின்றன. குடிநீர், கட்டடம், துாய்மை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளில் தன்னிறைவு அடைந்த ஊராட்சிகளில், மத்திய நிதிக் குழு மானியம் செலவிடப்படாமல், வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரக வளர்ச்சித் துறை ஆணையர், ஊராட்சி தலைவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். சுற்றறிக்கையில், 'பயன்படுத்தாமல் வைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் நிதியை, ஊராட்சி உதவி இயக்குநர் வங்கி கணக்கு வழியாக, மாநில ஊரக வளர்ச்சி முகமை வங்கி கணக்கிற்கு மாற்ற வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. அதாவது, 14வது மத்திய நிதிக் குழு மானியத்தில், 2015- - 16 முதல் 2019- - 20 வரையில் செலவிடாமல் வைத்துள்ள சேமிப்பு நிதியை ஒப்படைக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சிக்கும், தலா, ஒரு லட்சம் ரூபாய் என்று கணக்கு வைத்தாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல கோடி ரூபாய்க்கு மேல் வரும். இதேபோல், தமிழகம் முழுதும் இருக்கும் ஊராட்சிகளில் சேமிப்பு நிதியை கேட்டு பெற்றால், பல கோடி ரூபாய் கணிசமான தொகை அரசிற்கு கிடைக்கும் என, கணக்கிட்டுள்ளனர். ஊராட்சிகளுக்கு ஒதுக்கிய மத்திய அரசு நிதியை, மாநில அரசு அதிகாரிகள் கேட்டு வாங்குவது, எந்த விதத்தில் நியாயம் என, ஊராட்சி தலைவர்கள் இடையே புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஊராட்சி தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என, புலம்பலும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது: ஊராட்சிகளுக்கு சொர்பமான நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி ஊராட்சிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத வகையில், சில இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, ஊராட்சிகளுக்கு மத்திய அரசு தனி நிதி ஒதுக்குகிறது. இந்த நிதியை சம்பந்தப்பட்ட திட்டத்திற்கு பயன்படுத்துவதை தவிர்த்து, பிற திட்டங்களுக்கு பயன் படுத்த அதிகாரிகள் பரிந்துரை செய்கின்றனர். முதலில் ஒதுக்கும் நிதியை, மாற்று திட்டத்திற்கு பயன்படுத்துவதே தவறு. தற்போது, மத்திய அரசு ஒதுக்கிய நிதியை, மாநில அரசு கேட்டு பெறுவது எந்த விதத்தில் நியாயமாக உள்ளது. ஊராட்சிக்கு ஒதுக்கும் நிதியை கையாளும் அதிகாரம், அந்தந்த ஊராட்சி தலைவர்களுக்கு உள்ளது. இருப்பினும், ஊரக வளர்ச்சி அதிகாரிகள் சொல்வதை தான் ஊராட்சி பிரதிநிதிகள் கேட்க வேண்டும் என, கட்டாயப்படுத்துவது சரியல்ல. எனவே, ஊராட்சி மக்களின் தேவைகளை அறிந்து, இதுபோன்ற பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க ஊரக வளர்ச்சி துறை தவறி விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர். ஊரக வளர்ச்சித்துறை ஆணையரின் வழிகாட்டுதல்படியே, ஊராட்சிகளில் பயன்படுத்தாமல் இருக்கும் மத்திய சேமிப்பு நிதியை கேட்டு பெறுகிறோம். இந்த நிதியை வேறு ஏதேனும் திட்டத்திற்கு பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. - மாவட்ட ஊரக வளர்ச்சி அதிகாரி, காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை