‛மேன்ஹோல் சேதம் பாதசாரிகள் அச்சம்
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், கான்கிரீட் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு, அதன் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், மேட்டுகம்மாள தெருவில் உள்ள தனியார் உணவகம் அருகே, நடைபாதையில் கால்வாய் ‛மேன்ஹோல்' மீது அமைக்கப்பட்ட சிமென்ட் மூடி உடைந்த நிலையில் உள்ளது.இதனால், நடைபாதையின் மீது நடந்து செல்லும் பாதசாரிகள், நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, நடைபாதையில், மழைநீர் கால்வாயின் மீது உடைந்த நிலையில் உள்ள மேன்ஹோல் சிமென்ட் மூடியை சீரமைக்க வேண்டும் என, பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.