| ADDED : டிச 01, 2025 03:12 AM
ஸ்ரீபெரும்புதுார்: சுங்குவார் சத்திரத்தில் இருந்து திருமங்கலம் கண்டிகை செல்லும் சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளால், நோய் தொற்று பரவும் அச்சத்தில், அப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், திருமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட திருமங்கலம் கண்டிகை பகுதியில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியினர், திருமங்கலம் கண்டிகை பிரதான சாலை வழியே, சுங்குவார்சத்திரம் சென்று, அங்கிருந்து காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், சுங்குவார்சத்திரத்தில் உள்ள உணவகம் மற்றும் இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை, திருமங்கலம் பிரதான சாலையோரம் கொட்டி வருகின்றனர். இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் துர்நாற்றத்தால் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக, திருமங்கலம் கண்டிகையில் இருந்து, சுங்குவார்சத்திரம் செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவ --- மாணவியர் நோய் தொற்று பரவும் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.