உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தென்னேரி பகுதியில் ஏற்படும் மின் தடையால் மக்கள் அவதி

தென்னேரி பகுதியில் ஏற்படும் மின் தடையால் மக்கள் அவதி

வாலாஜாபாத்:தென்னேரியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியம், தென்னேரி கிராமத்தில் 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு வாலாஜாபாத் துணை மின் நிலையம் வாயிலாக மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக முன் அறிவிப்பு ஏதுமின்றி தினசரி நீண்ட நேரம் மின்தடை ஏற்படுவதாக அப்பகுதியினர் புலம்புகின்றனர். இதுகுறித்து, தென்னேரி கிராம வாசிகள் கூறியதாவது: தென்னேரியில், கடந்த ஒரு வாரமாக இரவு, பகலாக அடிக்கடி தொடர் மின்வெட்டு பிரச்சினை நிலவுகிறது. இதனால், வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்களை தேவையான நேரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. விவசாய நில பயிர்களுக்கும் மின்மோட்டார் மூலம் பாசனம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக குடிநீர் தேவைக்கு ஆழ்த்துளை கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்ச இயலாததால் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை நிலவுகிறது. எனவே, தென்னேரியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை போக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, வாலாஜாபாத் துணை மின்நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தென்னேரியில் மின்தடை ஏற்படுவது குறித்து புகார் ஏதும் வரவில்லை. எனினும், அப்பகுதியில் உரிய ஆய்வு மேற்கொண்டு மின்தடை பிரச்னை இருக்கும் பட்சத்தில் சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !