கருப்படிதட்டடை நுாலகம் செயல்பட மக்கள் வலியுறுத்தல்
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படிதட்டடை ஊராட்சி, பஞ்சுபேட்டையில், 2011ம் ஆண்டு, மார்ச் 1ம் தேதி முதல், நுாலகம் செயல்பட்டு வருகிறது. ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் தினசரி நாளிதழை வாசிக்கவும், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், அரசு போட்டி தேர்வு எழுதுவோர் குறிப்புகள் எடுக்க நுாலகத்திற்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில், சில நாட்களாக நுாலகம் முறையாக திறக்கப்படுவதில்லை என, கிராமத்தினர் புகார் தெரிவிக்கின்றனர். நுாலக ஊழியர் எப்போது வருகிறார், எப்போது நுாலகத்தை திறக்கிறார் என, தெரியவில்லை.எனவே, கருப்படிதட்டடை ஊராட்சியில் இயங்கும் நுாலகம் முறையாக இயங்க, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பஞ்சுபேட்டை மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில், 'கருப்படிதட்டடை ஊராட்சி செயலர் மற்றும் தலைவரிடம் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, நுாலகம் திறக்கவும், முறையாக செயல்படவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.