குடியிருப்பு அருகே டாஸ்மாக் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் ‛உங்களை தேடி; உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை, கலெக்டர் கலைச்செல்வி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.சுங்குவார்சத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், புதிதாக அமைக்கப்பட்டு திறக்கப்படவுள்ள முதல்வர் மருந்தகம், ரேஷன் கடையில், பொருட்களின் இருப்பு பதிவேடு மற்றும் வழங்கப்படும் பொருட்களின் தரத்தையும் ஆய்வு செய்தார்.சுங்குவார்சத்திரம் பயிரிடுவோர் கூட்டுறவு வங்கியை பார்வையிட்டு, வங்கியில் வழங்கப்படும் கடன் விபரங்களை கேட்டார். தொடர்ந்து, சுங்குவார்சத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் வாயிலாக, 18 பயனாளிகளுக்கு, 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.தொடர்ந்து, சந்தவேலூர் ஊராட்சியில், 2022 - -23ம் நிதியாண்டில் பழங்குடியினர் குடியிருப்புகள் திட்டத்தின் கீழ், 22 நரிக்குறவர் இன மக்களுக்காக, 96.23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு, ஸ்ரீபெரும்புதுாரில் இயங்கி வரும், அரசு நிதியுதவி பெறும் குழந்தைகள் இல்லத்தை பார்வையிட்டு, கற்றல் திறனை கேட்டறிந்தார்.பின், ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் முகாமில், ஸ்ரீபெரும்புதுார் -- திருவள்ளூர் சாலையில் புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நுஸ்ரத் நகர் இஸ்லாமிய மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன், வேளாண்மை இணை இயக்குனர் ராஜ்குமார், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.