பிரதமர் மேம்பாடு திட்டம்: 13 கிராமங்கள் தேர்வு பணிகளை தேர்ந்தெடுத்து வசதிகள் ஏற்படுத்த முடிவு
காஞ்சிபுரம்:பிரதமர் மேம்பாடு திட்டத்தின் கீழ், சாலை, குடிநீர், சுகாதார பணிகள் செய்வதற்கு, கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. பணிகள் தேர்வு செய்து வசதிகள் நிறைவேற்றப்பட உள்ளன. காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகளில், 1,300க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. ஊராட்சிகளில், மத்திய, மாநில அரசு திட்ட நிதிகளை பயன்படுத்தி வளர்ச்சி பணிகள் தேர்வு செய்து, உள்ளாட்சி நிர்வாகங்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. குறிப்பாக, குக்கிராமங்கள் மேம்பாட்டு திட்டம்; அண்ணா மறுமலர்ச்சி திட்டம்; ஊரக குடியிருப்பு மேம்பாடு திட்டம், ஆதிதிராவிட குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் சாலை, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் செய்யப்படுகின்றன. அந்த வரிசையில், நடப்பாண்டு பிரதமர் மேம்பாடு திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் ஒன்றியத்தில், ஒரு ஊராட்சி; உத்திரமேரூர் ஒன்றியத்தில் நான்கு ஊராட்சிகள்; ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், நான்கு ஊராட்சிகள்; வாலாஜாபாத், குன்றத்துார் ஆகிய ஒன்றியங்களில், தலா இரு ஊராட்சிகள் என, 13 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர் அடங்கிய குழுவினர், பட்டியல் இன மக்கள் வசிக்கும் ஊரக குடியிருப்புகளை கணக்கெடுக்கும் பணி துவக்கியுள்ளனர். இதில், 2,561 வீடுகள் மாவட்டம் முழுதும் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு தேவையான பணிகள் தேர்வு செய்து, சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெற்று, வளர்ச்சி பணிகள் செய்யப்பட உள்ளன. இதன் வாயிலாக, பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிகளில், கூடுதல் வசதிகள் கிடைக்கும் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிரதமர் கிராம மேம்பாடு திட்டத்தில், பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிகளின் மிகவும் வசதிகளில் பின் தங்கியுள்ள குடியிருப்புகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. அங்கு, தலா 20 லட்ச ரூபாய் ஒதுக்கீட்டில், சாலை, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கு, பணிகள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. விரைவில், ஒப்புதல் பெற்று பணிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.