ஆக., 27ல் விநாயகர் சதுத்தி விழா சிலைகள் தயாரிப்பு பணி துவக்கம்
காஞ்சிபுரம், விநாயகர் சதுர்த்தி விழா, ஆக.27ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, காஞ்சிபுரம் அடுத்த புஞ்சையரசந்தாங்கல் கிராமத்தில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் அரை அடி உயரம் முதல், இரண்டடி உயரம் வரையுள்ள சிலை தயாரிக்கும் பணியை துவக்கியுள்ளனர்.நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா, ஆக., 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி கோவில்களிலும், பொது இடங்களிலும், வீடுகளிலும் வைத்து வழிபாடு நடத்தும் வகையில், சின்ன காஞ்சிபுரம் அஸ்தகிரி தெரு, கன்னிகாபுரம், நசரத்பேட்டை, புஞ்சையரசந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இதில், புஞ்சையரசந்தாங்கல் கிராமத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து புஞ்சையரசந்தாங்கல் கிராமத்தில் விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கைவினை கலைஞர் ஹம்ரத் கூறியதாவது:ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து, 20 ஆண்டுகளுக்கு முன், தமிழகத்திற்கு வந்தோம். தற்போது புஞ்சையரசந்தாங்கலில் நான்கு குடும்பத்தினர் தங்கி இருக்கிறோம். சாக்பீஸ் துகள் மற்றும் களிமண் கலவை மூலம் விநாயகர் சிலை தயாரிப்பு பணியை கடந்த மாதம் துவக்கினோம்.எங்களிடம் அரை அடி உயரம் உள்ள விநாயகர் சிலை 100 ரூபாயக்கும், இரண்டடி உயரம் உள்ள விநாயகர் சிலை 3,000 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.