வடிகால்வாய் இல்லாததால் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி உப்புகுளம் பகுதியில், வடிகால்வாய் இல்லாததால், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி, 20வது வார்டுக்கு உட்பட்ட உப்புகுளம் பகுதியில், 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், வடிகால்வாய் வசதி இல்லாததால், சில நாட்களாக பெய்து வரும் மழையால், குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் வெளியேறாமல் உள்ளது. அத்துடன், கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. தேங்கிய நீரில் உலாவும் விஷ பூச்சிகள், வீட்டிற்குள் புகுந்து விடுவதாகவும், பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, உப்புகுளம் பகுதியில், மழைநீர் வடிகால்வாய் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.