காஞ்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மடம் தெரு பகுதியில் மஞ்சள்நீர் கால்வாயின் கிளை கால்வாய் செல்கிறது. இக்கால்வாய் மீது இரும்பு கம்பிகளை வெல்டிங் வைத்தும், அருகில் உள்ள மாநகராட்சி இடத்தையும் இணைத்து அந்த இடத்தை, சில ஆண்டுகளுக்கு முன்பாக, சிலர் ஆக்கிரமித்தனர். பின், உணவகமாக மாற்றி கடை நடத்தி வந்தனர்.கால்வாய் மற்றும் மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அவற்றை அகற்ற வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் மற்றும் அமைச்சர் பங்கேற்ற குறைதீர் கூட்டத்தில் சிலர் புகார் மனு அளித்தனர்.இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் ஒன்றிணைந்து, மடம் தெருவில் ஆக்ரமிப்பில் இருந்த கால்வாய் மற்றும் மாநகராட்சி இடத்தை பொக்லைன் இயந்திரம் வாயிலாக, அங்கிருந்த கடையை இடித்து அந்த இடத்தை மீட்டனர்.இதேபோல, மேட்டுத் தெருவில் கால்வாய் நீர்வழித் தடத்தை ஆக்கிரமித்து புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.