திருமுக்கூடல் அரசு பள்ளி தரம் உயர்த்த கோரிக்கை
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில், பல ஆண்டுகளாக அரசு உயர்நிலைப் பள்ளி இயங்குகிறது. இந்த பள்ளியில், 285 மாணவ - மாணவியர் பயில்கின்றனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவ - மாணவியர் இப்பள்ளியில் பயில்கின்றனர்.இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று முடிந்த மாணவ - மாணவியர் மேல் வகுப்பில் பயில 15 கி.மீ., தூரத்தில் வாலாஜாபாத், ஏகனாம்பேட்டை பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளை நாடுகின்றனர்.காஞ்சிபுரத்தில் இருந்து, திருமுக்கூடல் வழியாக சுற்றுவட்டார கிராமங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அரசு பேருந்துகள் இயங்குகின்றன.இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில், போதுமான போக்குவரத்து வசதியின்றி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.எனவே, திருமுக்கூடல் அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.