மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம் எறையூரில் விபத்து அபாயம்
ஸ்ரீபெரும்புதுார்:எறையூர் சாலையோரம், மண் அரிப்பால் ஏற்பட்ட பள்ளத்தால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், வல்லக்கோட்டை அருகே பிரிந்து, எறையூர் சாலை வழியே தினமும், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.வல்லம் வடகால், ஒரகடம் சிப்காட் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள், தினமும் இருசக்கர வாகனங்களில், இந்த சாலையில் அதிகளவில் சென்று வருகின்றனர்.இந்த நிலையில், சமீபத்தில் பெய்த மழையால், இந்த சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும்போது, சாலையோரம் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும், பள்ளி பேருந்துகள் விபத்தில் சிக்கும் சூழல் அதிகரித்து உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், எறையூர் சாலையோரம் மண் அரிப்பால் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.