உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வடிகால்வாய் பணிக்காக கான்கிரீட் சாலை உடைப்பு ரூ.20 லட்சம் வீணடிப்பு

வடிகால்வாய் பணிக்காக கான்கிரீட் சாலை உடைப்பு ரூ.20 லட்சம் வீணடிப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் வடிகால்வாய் பணிக்காக, 20 லட்சம் ரூபாயில் புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை உடைக்கப்பட்டு, மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. உத்திரமேரூர் பேரூராட்சி, 8-வது வார்டில், மஹாத்மா காந்தி தெரு உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த தெருவில், நான்கு மாதங்களுக்கு முன், 20 லட்சம் ரூபாய் செலவில், புதிய கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், தெருவின் இருபுறமும் சேதமடைந்துள்ள வடிகால்வாயை, ஆறு லட்சம் ரூபாயில் சீரமைக்கும் பணியை, பேரூராட்சி நிர்வாகம் நேற்று துவக்கியது. இதற்காக, புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை உடைக்கப்பட்டு வருகிறது. பேரூராட்சி நிர்வாகம் சரியாக திட்டமிட்டு, வடிகால்வாய் அமைக்கும் பணியை செய்யாததால், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் கூறியதாவது: மஹாத்மா காந்தி தெருவில் வடிகால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டது. குறித்த நேரத்திற்குள் நிதி கிடைக்காததால், அதற்கு பதிலாக கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. தற்போது நிதி கிடைத்துள்ளதால், வடிகால்வாய் பணி, கான்கிரீட் சாலையை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை