உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  நீர்நிலைகளில் அமைந்த பள்ளிகளுக்கு...சிக்கல்!:கட்டுமானத்துக்கு தடை விதிப்பு

 நீர்நிலைகளில் அமைந்த பள்ளிகளுக்கு...சிக்கல்!:கட்டுமானத்துக்கு தடை விதிப்பு

காஞ்சிபுரம்:நீர்நிலை புறம்போக்கு நிலத்தில், புதிய பள்ளி கட்டடம் கட்டக்கூடாது என தடை விதித்திருப்பதால், பள்ளிகளின் கட்டுமானத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், 'நபார்டு' திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட பள்ளிகளில் வசதிகள் குறைவாக இருப்பதால், பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 51 மேல்நிலை, 48 உயர்நிலை என, 99 அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில், ஆண்டுதோறும் சில பள்ளிகளை தேர்வு செய்து, புதிய பள்ளி கட்டடம் கட்டி தருவது மற்றும் பழுது பார்க்கும் பணியை, பொதுப்பணித் துறையினர் செய்து வருகின்றனர்.

புதிய கட்டடம்

அதன்படி, 2022- - 23ம் நிதி ஆண்டில், ஐந்து பள்ளிகள், 'நபார்டு' திட்டத்தில் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோல, 2023- - 24ம் நிதி ஆண்டில், ஆறு பள்ளிகள் கட்டுவதற்கும், 40 பள்ளிகள் சீரமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதில், 2022- - 23ம் நிதி ஆண்டில் நபார்டு திட்டத்தில் ஒதுக்கீடு செய்த, காரை அரசு உயர்நிலைப் பள்ளியில், கட்டுமான பணிகள் நிறைவு பெற்று மாணவ- - மாணவியர் பயன்பாட்டிற்கு வரவில்லை. கோவிந்தவாடி அரசு மேல்நிலைப் பள்ளி, இன்னும் கட்டுமான பணிகளை துவக்கவில்லை.உதாரணமாக, காரை உயர்நிலைப் பள்ளியில், 98 மாணவர்கள், 89 மாணவியர் என, மொத்தம் 187 பேர் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு, ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டடத்தில், உயர்நிலைப் பள்ளிக்குரிய வகுப்புகள், இட நெருக்கடியில் இயங்கி வருகின்றன.காரை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, பள்ளி கல்வித் துறை சிறுவாக்கம் கூட்டுச்சாலையில், 1.19 கோடி ரூபாய் மதிப்பில், காரை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, ஆறு வகுப்பறை, ஆய்வகம் கூடிய புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பள்ளி கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தும், பாதை, கழிப்பறை, சுற்றுச்சுவர் வசதிகள் இல்லாததால், பள்ளி புதிய கட்டடம் மாணவ- - மாணவியர் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.அதேபோல, 1961ம் ஆண்டு கட்டப்பட்ட கோவிந்தவாடி அரசு உயர்நிலைப் பள்ளி கட்டடம் உள்ளது. இந்த உயர்நிலைப் பள்ளி மேல்நிலையாக தரம் உயர்ந்த பின், 3 கோடி ரூபாய் செலவில், 2020ம் ஆண்டு புதிய கட்டடம் கட்டுவதற்கு, ஏற்கனவே இருந்த கட்டடத்தில் பணிகள் துவக்கப்பட்டன.அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர், நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் கட்டடம் கட்டுவதை நிறுத்த வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் கட்டடம் கட்டடக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.ஆட்சேபனை அற்ற நிலத்தில், பள்ளி கட்டடம் கட்டிக் கொள்ளவும் அறிவுரை வழங்கி இருந்தது. பள்ளிக்கல்வித் துறை பரிந்துரையின்படி, 4.5 கோடி ரூபாய் செலவில், 11 வகுப்பறைகள், கழிப்பறை, ஆய்வகம் கூடிய புதிய கட்டடம் கட்டும் பணிக்கு, நபார்டு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இதன் கட்டுமான பணிகளை, மற்றொரு பிரிவினர் தடுத்துள்ளனர். இதுதொடர்பாக, அதே பிரிவினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, கட்டடம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.அதேபோல, காரை உயர்நிலைப் பள்ளிக்கு கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால், இரு பள்ளி மாணவ- - மாணவியரும் வகுப்பறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இன்றி பரிதவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

கூடுதல் நிதி ஒதுக்கீடு

எனவே, மாவட்ட நிர்வாகம் முறையாக தலையிட்டு, பள்ளி கட்டடம் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, அரசு பள்ளி மாணவ- - மாணவியரின் பெற்றோர் எதிர்பார்த்து வருகின்றனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:காரை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவை கட்டும் பணிக்கு, 65 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.கோவிந்தவாடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னையால், பள்ளி கட்டடம் கட்ட முடியவில்லை. விரைவில் அனைத்து பிரச்னைகளையும் சரி செய்து பள்ளி கட்டடம் கட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை