நெடுஞ்சாலைகளில் அரசு பேருந்து நிற்க தனி இடம்: புறநகர் பயணியர் வரவேற்பு
படப்பை:தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகள் வழியாக, தினமும் ஏராளமான வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் - -வாலாஜாபாத், குன்றத்துார் - -ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட நெடுஞ்சாலையோரம் உள்ள பேருந்து நிறுத்தங்களில், அரசு பேருந்துகள் நிற்க தனியாக இடம் இல்லை.இதனால், நெடுஞ்சாலையிலேயே அரசு பேருந்துகள் நின்று, பயணியரை ஏற்றி, இறக்கிச் செல்கின்றன.அப்போது, பின்னால் வரும் வாகனங்களும், அரசு பேருந்துக்கு பின்னால் நிற்க வேண்டியுள்ளதால் நெரிசல் ஏற்பட்டது.மேலும், பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் அரசு பேருந்து மீது, பின்னால் வரும் வாகனங்கள் மோதி, அடிக்கடி விபத்தும் நடந்தது.இதனால், நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணியர் அச்சத்துடன் நின்று, பேருந்து பிடித்து செல்கின்றனர்.இந்நிலையில், கடந்த ஆண்டு, மணிமங்கலம்- - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை நான்கு வழியாக விரிவாக்கம் செய்யப்பட்டது.அப்போது, இந்த சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், சாலையை கூடுதலாக விரிவாக்கம் செய்து, அங்கு அரசு பேருந்து நின்று செல்ல தனி இடம் அமைக்கப்பட்டது.இதனால், அரசு பேருந்துகள் நெடுஞ்சாலையில் இருந்து விலகி, சாலையோரம் நிறுத்தி பயணியரை ஏற்றி செல்வதால், நெரிசலும், விபத்தும் தவிர்க்கப்படுகிறது.இது, புறநகர் பயணியரிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதைப்போல், அனைத்து நெடுஞ்சாலைகளிலும் தனி இடம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.