| ADDED : ஜன 09, 2024 10:06 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு, எல்லப்பா நகரில் உள்ள பூங்கா, முன்னாள் முதல்வர் அண்ணா நுாற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி, 2010ல், 15 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டது.இதில், அழகிய செயற்கை நீரூற்று, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சி மேற்கொள்ள டைல்ஸ் நடைபாதை, இரவில் ஒளிரும் மின்விளக்கு, இருக்கை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.இப்பூங்காவை எல்லப்பா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் பூங்காவை முறையாக பராமரிக்காததால், மழையின்போது நடைபாதையில் விழுந்த மரக்கிளைகள் அகற்றப்படாமல் உள்ளன.நடைபாதையில் பதிக்கப்பட்டுள்ள 'டைல்ஸ்' சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், பூங்காவிற்கு வருவோர் அமரும் இருக்கை, மின்விளக்குகள் பழுதடைந்து உள்ளன. செயற்கை நீரூற்றில் பாசி படர்ந்த நிலையில் உள்ளது.தற்போது, மேய்ச்சலுக்காக வரும் மாடுகள், பூங்காவில் படுத்து ஓய்வெடுக்கின்றன. செவிலிமேடு பகுதியினருக்காக, 15 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட பூங்கா, மாட்டுத்தொழுவமாக மாறி சீரழிந்துள்ளது.எனவே, எல்லப்பா நகர் பூங்காவை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.