நீரோட்டம் பார்க்காமல் வடிகால்வாய் கட்டியதால் கழிவுநீர் தேங்கி சீர்கேடு
ஸ்ரீபெரும்புதுார்:வைப்பூர் ஊராட்சி, வெள்ளேரித்தாங்கல் பகுதியில், நீரோட்டம் பார்க்காமல் கட்டப்பட்டுள்ள வடிகால்வாயில் கழிவுநீர் தேங்கி வருவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளேரித்தாங்கல் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. துர்நாற்றம்
இங்குள்ள கக்கன்ஜி தெரு, முத்துமாரியம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெருக்களில் வடிகால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் வழிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இதனால், வெள்ளேரித்தாங்கல் தெருக்களில் வடிகால்வாய் வசதி அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2024 - 25ம் நிதி ஆண்டில், ஊரக வளர்ச்சி துறை சார்பில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில், மூன்று தெருக்களிலும் கடந்த பிப்., மாதம் வடிகால்வாய் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், நீரோட்டம் தொடர்பாக முறையாக ஆய்வு செய்யாமல் வடிகால்வாய் அமைக்கப்பட்டதால், கழிவுநீர் முறையாக வடியாமல், தேங்கி உள்ளது. இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. வடிகாலில் கழிவுநீர் நிரம்பி, சாலையில் வழிந்து வருவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. வடிகால்வாய் நீரோட்டத்தை சரி செய்ய, மண்ணை கொட்டி உள்ளனர். இதனால் வடிகால் துார்ந்து போகும் நிலை உள்ளது. பாதிப்பு
அதே போல, முத்துமாரியம்மன் கோவில் தெருவில், முழுமை பெறாமல் வடிகால்வாய் பணி அரை குறையாக விடப்பட்டு உள்ளது. இதனால், கழிவுநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும், வடிகால்வாய் கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளால், மழை காலத்தில் மழைநீர் வீடுகளில் புகுந்து வெள்ள பாதிப்பு ஏற்படும் அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். எனவே, வெள்ளேரித்தாங்கல் பகுதியில் கழிவுநீர், மற்றும் மழைநீர் சீராக வெளியேறும் வகையில் வடிகால்வாய் சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.