உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சங்கரா கல்லுாரி
காஞ்சிபுரம்:சென்னை உலகத் திருக்குறள் மையம் உலகம் தழுவிய நிலையில் திருக்குறள் குறித்து 100 இடங்களில், 100 தலைப்புகளில், 100 ஆய்வு மாநாடு நடத்தி 100 ஆய்வுகள் வெளியிடுவது என்ற முயற்சியில் ஈடுபட்டது.இதில், காஞ்சிபுரம் விஜயலட்சுமி குணசேகரன் அறக்கட்டளையுடன் இணைந்து காஞ்சிபுரம் சங்கரா கலை அறிவியல் கல்லுாரி பங்கேற்றது.கடந்த ஜனவரி 27ம் தேதி உலகெங்கிலும் நடைபெற்ற இந்த உலகத் திருக்குறள் மாநாட்டில் சங்கரா கல்லுாரி 'திருவள்ளுவரின் மீட்பியல் சிந்தனைகள்' என்ற பொருண்மையில் ஆய்வு மாநாட்டை நடத்தியது. இவ்வாறு உலகெங்கிலும் ஒரே நேரத்தில் 95 இடங்களில் 95 தலைப்புகளில் திருக்குறள் மாநாடு நடத்தப்பட்டது.ஒட்டுமொத்தமாக 1,429 பேர் ஆய்வுக்கட்டுரை வாசித்து, உலக சாதனையாக அங்கீகரிக்கப்பெற்று லண்டனில் இயங்கும் உலக சாதனை புத்தகத்தில் பதிவுசெய்யப்பெற்றுள்ளது. இதற்கான பாராட்டுச் சான்றிதழ் , சங்கரா கல்லுாரிக்கு வழங்கப்பட்டுள்ளது என, சங்கரா கல்லூரி முதல்வர் முனைவர் கலை ராம வெங்கடேசன் தெரிவித்தார்.